Grab the widget  IWeb Gator

Thursday, November 10, 2011

வெளிநாட்டில் கல்வி: விண்ணப்பங்களும், விசா நடைமுறைகளும்-


    வெளிநாடுகளில் உயர்கல்வி மற்றும் ஆய்வு செய்ய விரும்புபவர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள கல்விச்சூழலை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் கல்வி ஆண்டுகள் வெவ்வேறு விதமாகக் கடைபிடிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள், செமஸ்டர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கின்றன. விசா நடைமுறைகளும் வேறு வேறாக இருக்கின்றன. இவை குறித்த அடிப்படை அறிவைப் புரிந்து கொள்வது, வெளிநாடு சென்று பயில விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.
இந்திய மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் சில நாடுகளில் உள்ள கல்வி சேர்க்கை விண்ணப்பம் மற்றும் விசா நடைமுறைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா
விண்ணப்பங்கள் சேர்க்கை துவங்குவதற்கு 12 முதல் 18 மாதங்களுக்கு முன்னரே வினியோகிக்கப்படும்.
பிப்ரவரி இறுதி வரை விண்ணப்பிக்கலாம் என்ற போதும், ஆகஸ்ட்டில் இருந்து அக்டோபருக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விடவும். மார்ச் அல்லது மே இறுதிக்குள் நீங்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்த முடிவு வெளியாகி விடும். செப்டம்பர் - அக்டோபரில் கல்வியாண்டு துவங்கும்.
விசா நடைமுறை
விசா நடைமுறை ஜூனில் துவங்கி ஆகஸ்ட்டில் நிறைவடையும். ஆன்லைனில் கிடைக்கும் டிஎஸ்-160 படிவத்தைப் பூர்த்தி செய்யவும். 600x1200 பிக்சல்களில் போட்டோ காப்பி செய்து, JPG முறையில் 240 கேபிக்கு உட்பட்டு ஸ்கேன் செய்யவும். படிவத்தின் பின்புறம் பார்கோடு பிரின்ட் செய்யவும். விசா கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட எச்டிஎப்சி வங்கிக் கிளையில் செலுத்தவும்.
விசா அலுவலகத்தில் சந்திக்கும் நேரத்தை VFS இணையப்பக்கத்தின் மூலம் உறுதி செய்துகொள்ளவும். பார்கோடு எண், டிஎஸ்160 படிவம், எச்டிஎப்சி யில் செலுத்தியதற்கான ரசீது இல்லாமல், சந்திக்கும் நேரத்தை உறுதி செய்ய முடியாது.
விசா அலுவலகத்துக்குச் செல்லும் நாளன்று, பாஸ்போர்ட், ஆறு மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட வெண்ணிறப் பின்னணி கொண்ட 2x2 அளவுள்ள புகைப்படம் உட்பட பார்கோடு எண்ணுடன் கூடிய டிஎஸ் 160 படிவம், கட்டணம் செலுத்திய ரசீது போன்றவற்றைக் கொண்டு செல்லவும். விசா VFS வழியாகவோ, கூரியர் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும். இந்த விவரங்களையும் ஙஊகு இணையப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.
இங்கிலாந்து
அக்டோபர் மாதம் முதல் விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். மார்ச்சுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டு மாணவர்கள் ஜூன் வரை விண்ணப்பிக்கலாம். கல்வியாண்டு துவங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். செப்., அக்டோபரில் வகுப்புகள் துவங்கும்.
விசா நடைமுறை
இங்கிலாந்தில் பயில விரும்பும் மாணவர்களுக்காகவே Tier4-students வகையில் விசாக்கள் வழங்கப்படுகின்றன. இம்முறையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். VAF-9 படிவத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 255 பவுண்டுகள். கல்விக்கட்டணம் செலுத்திய பின், பல்கலைக்கழகம் வழங்கும் விசா கடிதம் மிகவும் அவசியமான ஒன்று.
விண்ணப்பதாரர், இங்கிலாந்தில் வாழ்வதற்குப் போதுமான அளவு நிதி வைத்திருப்பதற்கானஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். 15 ஆவணங்கள் விசா பெற வைத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தூதரதகத்தில் நேரடியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின், அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள் விசா வழங்கப்பட்டு விடும். நேர்முக விசாரணை தேவை என விசா வழங்கும் அதிகாரிகள் நினைக்கும் பட்சத்தில், நீங்கள் நேர்முக விசாரணைக்கு அழைக்கப்படுவீர்கள்.
ஆஸ்திரேலியா
மே மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். அக்டோபரில் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நவ., ஜனவரிக்குள் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் வெளியிடப்படும்.  அக்டோபரில் துவங்கி ஜனவரிக்குள் விசா நடைமுறைக்காலம். பிப்வரியில் வகுப்புகள் துவங்கும். சில பல்கலைக்கழங்களில் செப்டம்பரில் துவங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.
விசா நடைமுறை
தொடர்புடைய பல்கலைக்கழகத்தில் முழுநேர படிப்பு பயில சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கான அங்கீகாரக் கடிதம் CRICOS இடமிருந்து பெற்றவுடன், விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் தெரிந்திருப்பது மிக அவசியம்.
ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, விசா பெறுவதற்கான நடைமுறை மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றித் தெரிந்து கொள்ளவும்.
விசா DIAC துறை மூலம் வழங்கப்படும். உங்களின் நிதிப்பின்புலம் பற்றி அதிகாரிகள் விசாரிப்பர். இதுதொடர்பான விவரங்களுக்கு www.cricos.dest.gov.au என்ற இணைய முகவரியில் காணலாம். நிறுவனங்கள் பற்றிய விவரங்களுக்கு www.immi.gov.uk இணையதளத்தைப் பார்வையிடலாம்.
கனடா
சேர்க்கைக்கு 15 முதல் 18 மாதங்களுக்கு முன்பாகவே விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். செப்டம்பரில் வழக்கமாக வகுப்புகள் துவங்கும். நான்கு வாரங்கள் வரை விசாநடைமுறை இருக்கும். ஜூலை முதல்வாரத்தில் விசா நடைமுறைகளைத் துவக்கி விடலாம்.
வொகேஷனல் சார்ந்த படிப்புகளைப் பயில விரும்பும் மாணவர்கள் பெரும்பாலும் கனடாவையே தேர்வு செய்கின்றனர். உடனடி வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் என்ற அளவிலேயே மாணவர்கள் மனதில் பதிந்து போயிருக்கிறது. மக்கள் அடர்த்தி குறைவான இந்நாட்டில், மிக அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது.  இங்கு வணிக மேலாண்மை, பொறியியல், ஊடகம், விருந்தோம்பல், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைகளில் அதிகளவு  இந்திய மாணவர்கள் சேர்கின்றனர்.
விசா நடைமுறை
விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் உங்களை ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். போதுமான நிதிஆதாரம் இருப்பதற்கான ஆவணங்களும் அவசியம். விசா கட்டணமாக ஏறக்குறைய 5,500 ரூபாயும், செயல்பாட்டுக் கட்டணமாக 700 ரூபாயும் செலுத்த வேண்டும்.
மாணவர் விசா நடைமுறை 30 நாட்கள் வரை இருக்கலாம். முதல்கட்ட நடைமுறைகளுக்குப் பின், மருத்துவ தகுதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பிரான்ஸ்
செப்டம்பர் மாதங்களில் வகுப்பு துவங்கும். கல்வியாண்டு துவங்க மூன்று மாதங்களுக்கு முன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி/மார்ச் மாதங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். மே இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கலை மற்றும் வடிவமைப்பில் ஆர்வம் மிக்க இந்திய மாணவர்களை, பிரான்ஸ் வரவேற்கிறது. அத்துறையில் உயர்கல்வி பயில பிரான்ஸ் மிகச்சிறந்த இடமும் கூட. படிப்பை நிறைவு செய்த பின் ஆறு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்படுகிறது. அக்காலகட்டத்தில் நீங்கள் அங்கு வேலைவாய்ப்பையும் தேடலாம்.
விசா நடைமுறைபிரான்ஸ் VFS இணையதளத்தில் இருந்து படிவங்களைத் தரவிறக்கம் செய்யலாம். புகைப்படம் தொடர்பாக கொடுக்கப்பட்டிருக்கும் விதிகளை கவனமாகப் பின்பற்றவும். டெல்லி, புதுவை, கொல்கத்தா, மும்பையில் தூதரகம் உள்ளது. பாஸ்போர்ட், கேம்பஸ் பிரான்ஸ் அடையாள எண்(பிரின்ட்அவுட்), கல்வி நிறுவனத்தில் பதிந்ததற்கான சான்று, கல்விச் சான்றிதழ்கள், பயணச்சீட்டு அல்லது பி.என்.ஆர்., எண், குடியிருப்புச் சான்றிதழ், விசா கட்டணம் முதலியற்றைச் செலுத்த வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அதற்கான பிரத்யேக குடியிருப்புச் சான்றிதழைப் பெற வேண்டும்.
ஜெர்மனி
குளிர்கால வகுப்புகள் அக்டோபரிலும், கோடை கால வகுப்புகள் ஏப்ரலிலும் துவங்குகின்றன. கோடை வகுப்புக்கு ஜனவரி 15ம் தேதிக்கு முன்னரும், குளிர்கால வகுப்புக்கு ஜூலை 15ம் தேதிக்கு முன்னரும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பயணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன், விசாவுக்கான விண்ணப்ப நடைமுறைகளைத் துவக்குவது நல்லது. பொறியியல், கணிதம், இயற்கை அறிவியல், சமூகவியல் பாடங்கள் தொடர்பாகவே இந்திய மாணவர்கள் அதிகளவில் ஜெர்மனி செல்கின்றனர். 300க்கும் மேற்பட்ட சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட துறைகளில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களும், பேராசிரியர்களும் படிப்பின் துவக்கத்தில் ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர். செலவினங்கள் அதிகமாகும் நாடு என்ற போதும், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்பதற்கென்றே ஏராளமான கடைகள் உள்ளன. நாட்டினுள் சென்றதும், குடியமர்வுத்துறை அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும்.
விசா நடைமுறை
பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட அங்கீகாரச் சான்றிதழ், முந்தைய கல்விச் சான்றிதழ்கள், ஒராண்டுக்கான செலவை சமாளிக்கும் விதத்திலான நிதிப்பின்புல உத்தரவாதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  முழு உடல் பரிசோதனை செய்து கொண்ட சான்றிதழ். போதை மருந்துகள் உட்கொள்வது தொடர்பான பரிசோதனையும் இதில் அடக்கம். விசா கட்டணம் 4,000 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment