Grab the widget  IWeb Gator

Friday, July 29, 2011

பிறை - ஒரே பிறைதான் அறிவுப்பூர்வமானது

இன்று நேற்றல்ல நாம் அறிந்த காலம் முதல் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாட்டுக்கான காரணிகளில் ஒன்றாகத்தான் பிறை இருக்கிறது.

இஸ்லாமிய நாட்கணக்கெடுப்பு பற்றி இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருமைப்பாடு இல்லாமையினால் உலக அரங்கிலே ஹிஜ்ரா வருடத்தை நடைமுறைப் படுத்த முடியாத அவலத்தைப் பார்க்கிறோம்.

எந்த இஸ்லாமிய நாட்டை எடுத்துக் கொண்டாலும், ஹிஜ்ரா ஆண்டை அமல் படுத்தப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக, அங்கு இஸ்லாமிய கலண்டர் அச்சடிக்கப்படுகிறது. அது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்காகச் செய்யப்படும் ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறதை அவதானிக்க முடிகிறது.

ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்க்க எமது சமூகம் தயாராக வேண்டும். இல்லையென்றால் நாம் நமது அறிமுகத்தைப் படிப்படியாக இழந்து விடுவோம். அதற்கு சரித்திரம் சான்று பகர்கிறது. அதே சரித்திரம் தொடர்கதையாய்ப் போய்க் கொண்டிருப்பதைத் தடுக்க முடியாது.

இஸ்லாமிய ஆண்டை உலகமெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு காலக் கணக்கெடுப்பாக அறிமுகப்படுத்த முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பிறைக் கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளே!

அகிலங்களைப் பராமரிக்கக் கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அல்-குர்ஆன் 1:1)

பூமி என்ற கிரகம் மட்டுமல்ல அதற்கும் அப்பால் மனிதனால் கணக்கெடுக்க முடியாத அளவுக்கு பரந்து விரிந்து கிடக்கும் அகிலங்களைப் பராமரிக்கக் கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று அந்த அல்லாஹ் தனது திருமறையின் தோற்றுவாயை ஆரம்பிக்கின்றான்.

அதன் தாற்பரியம் உணரப்பட வேண்டும். அகிலங்களின் இயக்கம், அவற்றில் மறைந்து கிடக்கும் துல்லியமான இயல்புகள்; ஆகியவற்றை தனது ஆளுமையின் கீழ் வைத்திருக்கக்கூடிய அந்தப்; பராமரிப்பாளனே புகழுக்குரியவன் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துகிறான். இந்தப் பிரகடனத்தின் ஒட்டுமொத்தமான அர்த்தம் இன்று உணரப்பட்டிருக்கிறதா என்பதை முஸ்லிம் சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

'ரப்பில்ஆலமீன்,' அகிலங்களைப் பராமரிப்பவன் - படைத்து, போஷித்து, இரட்சிப்பவன் - என்ற சொற்பிரயோகத்தின் பொருள் விரிவாக விளங்கப்பட வேண்டும். அதை பூமி என்ற கிரகத்திற்கு மாத்திரம் பொருத்திப் பார்க்க முடியாது. வான்வெளியில் அண்டசராசரத்தில் நீந்திக் கொண்டிருக்கக் கூடிய அனைத்துக் கிரகங்களையும் அது குறிக்கும்.

இது மட்டும்தானா?

இதற்கும் அப்பால் அகிலங்களின் ஆட்சியதிகாரம் அவனிடமுள்ளது என்பதை விளக்குகிறது இந்த வசனம்.

இந்த வசனத்தோடு 55ம் அத்தியாயத்தின் 33 வசனத்தைச் சேர்த்து வாசிக்கும் போது படைப்பின் இரகசியம் எவ்வளவு விரிவாகத் தெரிகிறது என்பதை அறிய முடிகிறது. படைக்கப்பட்ட கணக்கிலடங்காத உலகங்களைப் பற்றியும் அவற்றின் நேர்த்தியான இயக்கத்திற்குத் தான் தான் பொறுப்பு என்பதையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

அதன் பின் அவனுடைய அறிவிப்பை உறுதிப்படுத்துகிற பாங்கைப் பார்க்கும் போது மனிதன் அறிவு கொடுக்கப் பட்டு அந்த அறிவின் ஆற்றலினால் தனக்குத் தேவையானவற்றைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற பெரும் அறிவுறுத்தலையும் சொல்லிக் காட்டுகிறான்.

ஏன் மனிதன் சிந்திக்கிறானில்லை என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை தொக்கி நிற்பதைப் பார்க்கக் கூடியதாயுள்ளது.

மனித, ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விழிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள். (அல்-குர்ஆன் 55:33)

அகிலங்களை ஆட்சி செய்யக் கூடிய அல்லாஹ் மனிதனையும் ஜின்னையும் முன்னிலைப் படுத்தி பூமியின் விழிம்புகளைக் கடந்து செல்லும்படி அழைப்பு விடுக்கிறான்.

அதற்குத் தேவையான சக்தியைத் திரட்டிக் கொண்டால் அல்லாது அப்படிச் செல்ல முடியாது என்றும், ஆகவே அதற்குத் தேவையானவற்றை முன்கூட்டியே திரட்டிக் கொள்ளும்படியும் கூறுகிறான்.

சக்தியைத் திரட்டிக் கொண்ட மனிதன் சந்திரனில் கால் வைத்து உலாவி விட்டு வந்து சேர்ந்தான்.

வான்வெளியில் செயற்கைக் கோள்களில் நாட்கணக்கில், மாதக்கணக்கில் தங்கியிருந்து ஆய்வுகள் செய்கிறான்.

பூமி என்ற கிரகத்தில் வாழும் போது மட்டும்தான் இஸ்லாமியக் கடமைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையை அல்லாஹ்வோ அல்லது அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ முன் வைக்கவில்லை.

இஸ்லாம் மனிதன் எந்தக் கிரகத்தில் வாழ்ந்தாலும் பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தப் பூமியிலே வட, தென் துருவங்களில் உள்ள மனிதன் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் சூரியன் உதிப்பதையும், மறைவதையும் காண்கிறான்.

ஆறு மாதங்கள் ஒரே பகலாகவும், ஆறு மாதங்கள் ஒரே இரவாகவும் இருக்கிறதைப் பார்க்கிறான்.

அப்படியானால் அவனுக்கு அதை ஒரு நாள் என்று வரையறை செய்து விட முடியுமா? அங்கு வசிப்பவர்களைப் பொருத்த மட்டில் ஒரு வருடம்தான் ஒரு நாள் என்று ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இருக்கிறார்களா?

அங்குள்ள முஸ்லிம்கள் ஐந்தே ஐந்து நேரத் தொழுகைகளை மட்டும் தொழுதுவிட்டால் போதுமா? ஒரு பகலும் ஒரு இரவும்தானே வருகிறது ஓராண்டுக் காலத்தில் அவர்களுக்குக் கிடைக்கிறது!

அவர்கள் எப்படித் தொழுகிறார்கள், எப்படி நோன்பு வைக்கிறார்கள்?

அவர்கள் வாழக் கூடிய பகுதிக்கு அண்மையில் எங்கே 24 மணித்தியாளங்களுக்குள் இரவும் பகலும் ஏற்படுகிறதோ அந்தப் பகுதியைக் கருத்தில் கொண்டு கணக்கிட்டு அதற்கேற்ப தொழுகையை, நோன்பின் காலத்தை ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.

இன்று பலர் சொல்வது போல அந்தந்த நாட்டிலே தெரியக் கூடிய பிறையை வைத்துத்தான் நாள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றிருந்தால், பூமியைத் தவிர மற்றக் கிரகங்களில், வானில் சூழன்று கொண்டிருக்கக் கூடிய செயற்கைக் கோளங்களில், வட-தென் துருவங்களில் வாழக்கூடியவர்கள் எப்படி நாளைக் கணக்கிடுவார்கள் என்பதற்குத் தெளிவான, மழுப்பலில்லாத, விடை தெரிந்தாக வேண்டும்.

நாடு நாடுகள் என்று பூமியில் கோடு போட்டவர்கள் மனிதர்கள்! அல்லாஹ் இந்தப் பூமிக்கு கோடு போட்டு இஸ்லாத்தை அனுப்பி வைக்கவில்லை. இஸ்லாம் முழு மனித சமூகத்திற்கும் அனுப்பப் பட்டது. (ஜின்கள் மனிதனின் அதிகாரத்திற்கும் ஆட்சிக்கும் கீழ் வராமையால் அவர்களைப் பற்றிப் பேசுவதை நாம் தவிர்த்துக் கொள்வோம்.) இதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

பூமியை விடுத்து மற்றைய கிரகங்களுக்குச் செல்லக் கூடிய மனிதன் இப்போது அவற்றில் நிரந்தரமான குடியேற்றம் பற்றிச் சிந்திக்கிறான்,; அதற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறான். அல்லாஹ் நாடினால், அந்த முயற்சி வெற்றியடையலாம். (மேலே குறிப்பிட்ட அல்-குர்ஆன் 55:33 வசனம் இதற்கு அறைகூவல் விடுக்கின்றது.)

அப்போது, அங்கு வாழக் கூடிய முஸ்லிம்கள் எந்தப் பிறையைக் கண்டு நோன்பு வைக்கப் போகிறார்கள்?

பூமியில் தெரியக் கூடிய பிறையைப் பற்றிய செய்தி கிடைக்கப் பெற்றுத்தான் நோன்பு வைக்கப் போகிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஏனென்றால், அந்தச் சந்திரனில் குடியமர்வதுதான் மனிதனின் முதல் முயற்சியாக இருந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து சென்றவன் அமெரிக்காவில் பார்த்த பிறையையும், சவூதி அரேபியாவிலிருந்து சென்றவன் சவூதி அரேபியாவிலிருந்து பார்த்த பிறையையும், இந்தியாவிலிருந்து சென்றவன் இந்தியாவில் பார்த்த பிறையையும், இந்தோனேஷியாவிலிருந்து சென்றவன் இந்தோனேஷியாவில் பார்த்த பிறையையும் தனித்தனியாகப் பின்பற்றப் போகிறானா?

அல்லது எங்களுக்குப் பூமிதான் பிறை போலத் தெரிகிறது, ஆகவே அதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று ஒரு புது வாதத்தை முன் வைக்கப் போகிறார்களா?

இஸ்லாம் அறிவுபூர்வமான மார்க்கம். எள்ளளவும் இதில் சந்தேகமிருக்க முடியாது.

துருவங்களில் வாழக் கூடியவர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை முன்மாதிரியாகக் கொண்டுதான் முடிவுகள் வரவேண்டும்.

அப்படி அறிவுபூர்வமான முடிவுகளுக்க நம்மை ஆளாக்கும் போது சர்வதேச அளவில், இல்லை, சர்வ கிரக அளவில், பிறை என்பது பூமியில் எங்கு தென்பட்டாலும் அந்தப் பிறைதான் மாதத்தின் முதல் நாளாகக் கணக்கெடுக்கப் படல் வேண்டும்.

அப்படியானால்தான்:

நமக்கென்று ஹிஜ்ரா வருடம் மாற்றங்களில்லாமல் நடைமுறைப் படுத்த இயலுமாகவிருக்கும்.
இஸ்லாமிய ஒருமைப் பாட்டிற்கு அது வழிவகுக்கும்.
இஸ்லாம் மனித சமூகத்திற்கான பொது மார்க்கம் என்பதில் யாருக்கும் தர்க்கமிருக்க முடியாது.
எங்கெங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அங்கங்கெல்லாம் ஒரே நாளிலே நோன்பு நோற்கப்படும்.
உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், ஹஜ்ஜாஜிகள் அரபா மைதானத்திலே குழுமியிருக்கும் போது, அரபா தின ஸுன்னாவான நோன்பு நோற்கப்படும்.
(தற்போதைய நடைமுறை: ஹஜ்ஜாஜிகள் அரபாவிலிருந்து திரும்பி அடுத்த நாள் கல்லெறிந்து இஹ்ராம் கலையும் தினத்தில் தான் அந்தந்தப் பகுதியில் தெரியும் பிறைதான் சரியானது என்று வாதிடுபவர்கள் நோன்பு வைக்கிறார்கள். இது பெருநாள் தினத்தில் வைக்கப்படும் நோன்பு என்பதை ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்.)

எனவே, 'பிறை' என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தை சம்பந்தப்படுத்தும் ஒரு அறிகுறியாகத் தான் அல்லாஹ் நமக்கு ஆக்கித் தந்துள்ளான். அதை மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு இயங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வழிமுறை என்பதைச் சிந்திப்பவர்கள் உணர்வார்கள்.

உலகத்திலே ஓர் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்து ஹிஜ்ரா ஆண்டு அமல்படுத்தப்படும் போது குறிப்பிட்ட ஒரு நிகழ்வின் திகதியை எப்படி வரலாற்றில் குறித்து வைக்க முடியும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலே, இந்தியாவில் ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். கொலை செய்தவன் எகிப்திலே கைது செய்யப்படுகிறான். வழக்கு நடக்கிறது.

ஒரே திகதி அமலில் இல்லாதவிடத்து கொலையாளி தப்பிச் செல்ல அது காரணியாக மாட்டாதா? திகதியிலே குளறுபடிகள் ஏற்பட்டு நீதித் துறையே இயங்காமல் போய்விடக் கூடிய நிலை ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

மனிதன் போட்டுக் கொண்ட கோடுகளுக்குள் தன்னையும் தெரியாமலே இனம், தேசியம் பேசும் அளவிற்கு அறிஞர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.

ஆகவேதான் இன்று ஒரு பிறையை மறுத்துப் பல பிறைகளை ஏற்று அமல் செய்ய அவர்கள் முற்பட்டிருக்கிறார்கள்.

இஸ்லாம் இந்தப் பூமியில் வாழ்பவர்களுக்கு மட்டும் வந்ததல்ல, அது எந்தக் கிரகத்தில் இருந்தாலும் பின்பற்றக் கூடிய மார்க்கம் என்பதை ஒவ்வொரு விசுவாசியும் சந்தேகத்திற்கிடமின்றி ஒப்புக் கொள்ள வேண்டும். ஆகவே, பிறை உலகத்தில் எந்தக் கோணத்தில் தென்பட்டாலும் அதுதான் ஹிஜ்ரா ஆண்டின் நாட்கணக்கெடுப்பிற்கு உத்தரவாதமானது.

முழு மனித சமூகமும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அந்தப் பிறையைத்தான்.

ஆகவே, அறிஞர்கள் மீண்டும் தத்தமது நிலைப்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்த்து அல்லாஹ்வின் ஒருமைப்பாட்டில் ஒன்றிணைந்து தேசியம் பேசும் நிலையிலிருந்து விடுபட்டு அறிவுபூர்வமான முடிவுக்கு வரவேண்டும்.

வஆகிர் தஃவானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில்ஆலமீன்.

No comments:

Post a Comment