ரமலான் மாதத்தின் துவக்கத்தையும், அதன் முடிவையும் கணக்கிட மிகவும் துல்லியமான முறைகளை கையாள வேண்டியது உலகளாவிய முஸ்லிம்களுக்கு இன்றியமையாத விஷயமாகும். இந்த விஷயத்தில் வானவியல் ஆராய்ச்சியின் கணிப்புகள் நமக்கு பெரிதும் துணை புரிகின்றன. அவை துல்லியமான, நம்பகமான தகவல்களை அளிக்கின்றன என்பதில் மிக நீண்ட காலமாகவே அறிஞர்கள் மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை. அதி நவீன கருவிகளைக் கொண்டு மிக மிக நுட்பமான தகவல்களை பிறைகளை கணக்கிடுவதில் தரக்கூடிய விஞ்ஞான வளர்ச்சியடைந்து விட்ட இந்த காலக்கட்டத்துக்கு முன்பிருந்தே அறிஞர்களின் நிலை இதுதான். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மூதறிஞர் இமாம் தகீ-அல்-தீன் அல்-சுப்கி தனது தீர்ப்புகளில் ஒன்றில் பிறை சம்பந்தமாக குறிப்பிடுகையில்: வான்கணித முடிவுகள் தீர்க்கமான, உறுதி செய்யப்பட்ட தகவல்களை தருகின்றன. சாட்சியங்கள் 'அநேகமானது' என்ற தரத்தில்தான் தகவல்களை எடுத்து வைக்கின்றன. அநேகமானது என்ற எந்த விஷயமும் உறுதி செய்யப்பட்ட விஷயத்துடன் சரிநிலையில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எந்த ஒரு சாட்சியத்திற்கும் அது சாட்சியமளிக்கும் விஷயம் அறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிதாக இருக்கும் பட்சத்தில்தான் ஆதாரங்களுடன் அலசப்படும். அதாவது, வான்கணித முடிவுகள் உறுதியாக இன்று பிறையைக் காணவில்லை என்று தெரிவிக்குமானால், தான் பிறையைக் கண்டதாக ஒருவர் சாட்சி கூறினால் அவரது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் அவர் நடக்கவே முடியாத ஒன்றைக் குறித்து சாட்சி கூறுகிறார். இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் நடைபெற சாத்தியம் இல்லாத எதை குறித்தும் தேவையற்றவை. அறிஞர் அல்-சுப்கிக்கு முற்பட்ட இமாம் அபூ அல்-அப்பாஸ் இப்னு சுரைஜ் நபி (ஸல்) அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டி சொல்வதாவது: 'கணக்கிடுதலின் பக்கம் செல்லுங்கள் அதாவது கணக்கிடுதல் என்பது பிறையின் சராசரி பரிணாமங்களையும், அது உதிக்கும்போது அடையும் மாற்றங்களையும் கருத்தில் கொண்டு அமைதல் வேண்டும்.' அவர் மேலும் சொன்னதாவது: 'மேற்சொன்ன ஹதீஸ் இந்த விஷயத்தில் விஷேச ஞானம் உள்ளவர்களுக்குப் பொருந்தும் - இதே போன்று ஒரு மாதத்தை நிறைவு செய்ய 30 நாட்களை கடக்கச் சொல்லும் மற்றுமொரு ஹதீஸ் அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.' போதுமான படிப்பறிவில்லாத சமுதாயம் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது அவர்களது காலத்தில் வாழ்ந்த முதல் முஸ்லிம் சமூகமத்தவரையே குறிக்கும். காரணம் அவர்களில் வெகு சிலரே எழுத, படிக்க, கணக்கிட பயிற்சி பெற்றிருந்தனர். நபிகளாரின் இந்த குறிப்பு எல்லா தலைமுறையிலும் உள்ள முஸ்லிம்களை உள்ளடக்குவதல்ல. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தனது இறைச்செய்தியை சரிவர உள்வாங்கி செயல்படத்தக்க தேவையான அறிவுடைய மக்களாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றான். நடைமுறையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளும் விஷயமான தொழுகை நேரங்கள் வான்கணித அடிப்படையில்தான் தொகுக்கப்படுகின்றன. உண்மையில் இந்த தொழுகை நேரங்களும் கூட வான்கணித அடிப்படையில்தான்; நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற குறிப்புதான் குர்ஆன் மற்றும் ஹதீஸின் வாயிலாக நமக்கு கிடைக்கிறது. இதே அடிப்படையை கருத்தில் கொண்டு நோன்புக்கான நேரங்களை கணிப்பதில் நமது முன்னனி அறிஞர்களில் சிலர் வான்கணிதவியலை புறக்கணிப்பதும், அல்லது ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதும் மிகுந்த வியப்பளிக்கிறது. தொழுகை நேரங்கள் புவியியல் அமைப்பின்படி இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன. ஒவ்வொரு பகுதியினரும் தங்களுக்கென்று தனித்தனி வைகறை, மதியம் மற்றும் அஸ்தமன நேரங்களை வைத்துள்ளனர். இதற்கு நேர் மாற்றமாக ஒரு மாதத்தின் துவக்கம் என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுவதில்லை, அவற்றிற்கிடையேயான தூரங்களை வைத்து பிறைத் தோன்றும் நேரங்களில் வித்தியாசம் இருப்பினும் சரியே. சூரிய அஸ்மதனத்திற்குப் பிறகு புதிய பிறைத் தோன்றும் போது புதிய மாதமும் துவங்கின்றது. முதல் பிறை காணும் விஷயத்தில், பிறை உதிக்கும் நேரத்தில் உள்ள வித்தியாசத்தை மனதில் கொண்டு, அந்தந்த பகுதியினர் பிறையைக் காணும்போது மாதத்தை துவக்கும்படி வலியுறுத்தினர். காரணம் முதல் பிறையைக் காணுவதற்கு வெறும் மனித கண்களைத் தவிர வேறு எந்தவித சாதனங்களும் அன்று அவர்களிடம் இருக்கவில்லை. இந்த வித்தியாசம் எந்த விதத்திலும் ஒரு மாதத்தின் துவக்க நாளை மாற்றியமைத்து விடவில்லை. மாறாக அது அன்றைய சூழ்நிலைக்கொப்ப வாழ்ந்த மக்கள் தங்களது இமாம்களின் கட்டளைப்படி கடமைகளை நிறைவேற்றுமுகமாக நடந்துக்கொண்ட நிலைமையைத்தான் பிரதிபலிக்கிறது. அதாவது அல்லாஹ் பணித்த ஒரு குறிப்பிட்ட கடமையை நிறைவேற்றும் நேரம் வந்துவிடும்போது ஒரு அடியான் அல்லாஹ் தனது வேதமான குர்ஆனில் விளக்கிச் சொல்கிற தகவலின் அடிப்படையில் அதை நிறைவேற்ற வேண்டும். அன்றைய அறிவியல் முன்னேற்றமடையாத சமுதாயத்தினர் விஷயத்தில் அந்த குர்ஆனியத் தகவல் வெற்றுக்கண்களால் பிறையைக் காணுவதையே உண்மையாக்குகிறது. இந்த பிறை காணும் விஷயத்தை வேறொரு கோணத்தில் அணுகும் மற்ற அறிஞர்கள், பிறை காணும் நேரங்களில் வித்தியாசம் ஏற்படுவதை மறுப்பதுடன் உலக முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஓர் இடத்தில் பிறை கண்டால் அதை பின்பற்றினால் போதுமானது என்ற கருத்தை வலுவாக எடுத்து வைக்கின்றனர். இவர்கள் ஒரு மாதம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே நாளில்தான் துவங்க வேண்டும் என்ற உண்மையின் அடிப்படையாகக்கொண்டு வலியுறுத்தும் இந்த கருத்துக்கு எதிர்வாதம் இருக்க முடியாது. எனினும், இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும்புகிறது: உலகில் எந்த பகுதியில் பிறை பிறந்தாலும் அதை கணக்கில் எடுத்துக் கொள்வதா? அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தை உலக முழுவதற்கும் மையமாக நிர்ணயித்துக் கொண்டு அங்கு பிறைக்கண்டு மாதத்தை துவங்குவதா? இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலஞ்சென்ற ஷேக் அஹ்மத் முஹம்மத் ஷாகிர் என்ற ஹதீஸ் கலையில் பிரபலமான மார்க்க அறிஞர் மேலே சொன்னது போல ஒரு இடத்தை மையமாக வைத்து செயல்படுவதை ஆதரித்துள்ளார். அவர் இதற்கு இஸ்லாமியச் சட்டங்களின் இரண்டு மிக முக்கிய ஆதாரங்களான குர்ஆனிலும், ஹதீஸிலும் அதிகம் பேசப்பட்ட இடமான மக்கா மாநகரை பரிந்துரைத்துள்ளார். அல்லாஹூத்தஆலா தனது குர்ஆனில் பிறை அடையும் ஒவ்வொரு நிலையைப் பற்றியும், பௌணர்மியாகவும், அமாவாசையாகவும் அதை மாற்றமடையச் செய்யும் புறக்காரணிகளைப் பற்றியும் சுட்டிக்காட்டுகின்றான். 'பிறைகளை பற்றி உம்மிடம் கேட்கிறார்கள் - நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன...' (2:189) அதாவது அன்றைய மக்கள் குறிப்பாக அரபுலகத்தினர் இந்த வசனங்கள் இறங்கிய காலகட்டத்தில் தங்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு நேரங்களை கணிப்பதற்கும், ஹஜ்ஜூக்கான நாட்களை உறுதி செய்துக் கொள்வதற்கும் இந்த வசனங்களையேச் சார்ந்திருந்தனர். ஷேக் அஹ்மத் ஷாகிர் மேற்படி வசனத்தில் சாதாரணமான காலங்களில் நேரத்தை கணிப்பதை தொடர்ந்து, பிரத்யேகமான முக்கியத்துவம் ஹஜ் கடமைக்கு கொடுக்கப்பட்டிருப்பதை பிரதிபலிக்கிறார். இதில் அவர் கவனிக்கத்தக்க ஒரு செய்தி புதைந்திருப்பதை கண்டுபிடிக்கிறார் அதாவது இந்த வசனம் நேரத்தையும் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் சம்பந்தப்படுத்துவதை உணரலாம் - அதாவது ஹஜ்ஜூ செய்யும் தளமான மக்கா மாநகரம்தான் அது. நபி (ஸல்) அவர்களது சுன்னத்துகளில் ஒரே ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புகளை காணுகிறோம். அபூ தாவுத் அவர்கள் அறிவிக்கும் அவற்றில் மிகவும் விளக்கமான ஒரு ஹதீஸில் நபி (ஸல்) சொல்கிறார்கள்: 'நீங்கள் எதை நோன்பு பெருநாள் என்று தீர்மானிக்கின்றீர்களோ அதுதான் நோன்பு பெருநாள். மேலும் நீங்கள் அறுத்துப் பலியிடும் நாளான ஈதுல் அத்ஹாவானது நீங்கள் குர்பானி கொடுக்கும் நாளன்றுதான். அரஃபாத் மைதானத்தின் அத்தனைப் பகுதிகளுமே அரஃபாத் தினத்தன்று ஹாஜிகள் கூடுவதற்கு உகந்தவையாகும்;. மக்காவின் எல்லாப்பகுதிகளைப் போன்று மினாவைச் சார்ந்த எல்லாப்பகுதிகளுமே நீங்கள் குர்பானியை நிறைவேற்றுவதற்கு உகந்தவையாகும்.' என்ற செய்தி இடம்பெறுகிறது. ஷேக் அஹ்மத் ஷாகிர் இந்த குறிப்பிட்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களது இறுதி ஹஜ்ஜின் போது, ஹஜ்ஜூக்கான இடத்தில் இருந்த ஹாஜிகளைக் குறித்து பேசுகிறது என்று அபிப்ராயம் கொள்கிறார். ஆகவே ஷேக் அஹ்மத் இந்த ஹதீஸூக்கு கீழ்க்கண்டவாறு அர்த்தம் கொள்கிறார்: மக்காவையும் அதன் சுற்று வட்டாரங்களையும் சார்ந்த மக்கள் நோன்பு நோற்கும் போது நோன்புக்கான மாதம் துவங்குகிறது. மேலும் அதைத் தொடர்ந்து வரும் பண்டிகையானது அந்த மக்கள் தங்களது நோன்புகளை முடித்துக் கொள்ளும் தினத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் தியாகப்பெருநாள் தினம் அதை அந்த மக்கள் கொண்டாடும்போதும், அரஃபாத் நாள் என்பது அந்த மக்கள் அரஃபாத்தில் இருக்கும் தினத்திலும் அனுசரிக்கப்படுகின்றன. ஷேக் அஹ்மத் அவர்களின் கருத்தை நடைமுறைப்படுத்தினால் முஸ்லிம்கள் பிறை மாதங்களை கணிக்கும் விஷயத்தில் ஒருமித்த கருத்தில் வர வாய்ப்புள்ளது. புனித மக்கா மாநகரம் அவர்களது நேர அட்டவனையை உருவாக்குவதில் மையப்புள்ளியாக இருக்கும். இதுதான் சரியான தேர்வுமாகும், காரணம் மக்கா இஸ்லாம் உதித்த மண் என்பதாலும், குர்ஆனிய வசனங்கள் இறங்கத் துவங்கிய நிலம் என்பதாலும் தான். மேலும் இங்குதான் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ்ஜூக்காக ஒன்றுக்கூடி ஒருவரை ஒருவர் அறிமுகமாகி சகோதரப் பந்தத்தை பலப்படுத்திக் கொள்கின்றனர். அது மட்டுமில்லாமல் இங்குதான் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் உலகின் பல கோணத்திலிருந்தும் தங்களது தொழுகையில் முன்னோக்கும் புனிதமிக்க கஅபா ஆலயம் உள்ளது. காலஞ்சென்ற சில முன்னனி அறிஞர்களின் விமர்சனங்களை காரணம் காட்டி, நம்பத்தகத்தன்மை அதிகமுள்ள வான்கணித முறைகளின்படி பிறைக்கணக்கை வகுத்துக் கொள்வதை கடைபிடிப்பதில் நாம் தயக்கம் காட்டக்கூடாது. ஃபிக்ஹ் மற்றும் ஹதீஸ் கலையில் சிறந்து விளங்கிய முற்காலத்தைய அறிஞர்கள் பெரும்பாலும் வானவியலில் இத்தனை அறிவியல் உண்மைகள் இருக்கும் என்பதை அறியும் வாய்ப்பு இல்லாதவர்களாகவே இருந்தனர். அவர்களில் வெகு சிலர் வேண்டுமானால் வானவியலின் சில அடிப்படைகளை புரிந்தவர்களாக இருந்திருக்கலாம். இன்னும் அவர்களில் பலர் இத்தகைய அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களின் கூற்றுக்களை நம்பக்கூடத் தயாராக இருக்கவில்லை. உண்மையில் அத்தகைய ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளவர்களின் ஈமானில் கூட குறையிருப்பதாக கருதினர். அதற்குக் காரணம் வானவியலில் அறிவு பெற்றிருந்த ஒரு சிலர் எதிர்காலத்தை கணிப்பது போன்ற மார்க்கத்துக்கு முரணான விஷயங்களில் ஈடுபட்டதுதான். அன்றைய மார்க்க அறிஞர்கள் அவர்களது ஒட்டுமொத்த செயல்பாடுகளைக் கொண்டுதான் மதிப்பளிக்கப்பட்டனர், ஏனெனில் இயற்பியல் போன்ற விஞ்ஞான துறைகள் மார்க்கத்தின் வரம்புகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்திருக்கவில்லை. உண்மையில் அன்றையக் கண்டுபிடிப்புகள் நிரூபிக்கப்படாதவைகளாகவும், முழுமை பெறாதவைகளாகவும் இருந்ததும் இத்தகைய நிலைப்பாட்டிற்கான அடிப்படைக் காரணம் எனலாம். ஆனால் இன்றோ வானவியல் விஞ்ஞானம் அபரிமித முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அறிவியலின் பிறத்துறைகளை எல்லாம் பின்தள்ளி விடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. வானவியல் விஞ்ஞானிகள் புதிய பிறையின் பிறப்பை அன்றைய சூரிய அஸ்தமனம் நிகழ்ந்த அடுத்த வினாடியில் மிகவும் துல்லியமாக கணித்து ஒவ்வொரு புதிய பிறைமாதத்தின் துவக்கத்தையும் நமக்கு அறிவித்து விடும் அளவிற்கு திறமைப்படைத்துள்ளனர். அவர்களது ஆராய்ச்சியின் முடிவுகள் பரிபூரணமாக நிச்சயமானவை. ஆகவே அவர்களது தொழுகை நேரக் கணிப்புகளை ஏற்றுக் கொள்வது போலவே, பிறைக்கணக்கில் அவர்கள் தரும் கணிப்புகளை நம்பி ஏற்றுக்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. நமது அபிப்ராயப்படி, இந்த விஷயத்தில் சிறந்த நடைமுறைகளை இணைக்கும் அனுகுமுறையே சிறந்ததாகும். பிறை பிறக்கும் நேரத்தை அதன் சரியான நேரத்தில் கணக்கிடும் வானவியல் கணித முறைகளின் அடிப்படையில் நாம் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதோடு உறுதியான ஈமானும், திறமையுமிக்க வானவியல் விஞ்ஞானிகள் சிலரை இந்த பணியில் அமர்த்தி, அவர்களுக்கு மக்காவில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தில் அலுவலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களது நவீன வானவியல் கருவிகளான டெலஸ்கோப் போன்றவைகளின் உதவியுடன் பிறை பிறக்கும் நேரத்தை கணித்துச் சொல்வார்கள். அல்லாஹூத்தஆலாவின் நாட்டமிருந்தால் மிகவும் சரியான நேரத்தை அவர்களது கணிப்புகளின் படி நாம் பெறலாம். ஒருவேளை அப்படியும் அவர்களால் பிறையை காண முடியாமல் போனால் (இது மிக மிக அரிதானது), இந்த சூழ்நிலையில் இப்னு சுரைஜ் விளக்குவதின்படி நபி (ஸல்) அவர்களின் கட்டளையை செயல்படுத்தி 'அனுமான' உக்திகளை கையாளலாம். இந்த விஷயத்தில் நாம் அனுமானத்தை விட உறுதியான முடிவை தருவதில் சாத்தியம் அதிகம் உள்ள கணித முறைகளை சார வேண்டியுள்ளது. மக்காவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் பிறையைக் காணுவதோடு நின்று விடாமல் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளும் தங்களது கணிப்புகளை மக்கா வானவியல் துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்கலாம். இவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்கள் மக்காவின் மீது மேக மூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் தெளிவான முடிவை எடுப்பதில் மக்;காவின் விஞ்ஞானிகளுக்கு உறுதுணையாக இருக்கும். இத்தகைய ஆராய்ச்சிகள் ரமலான் மற்றும் துல்ஹஜ் மாதங்களில் மட்டுமல்லாது வருடத்தின் எல்லா மாதங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால், பிறைக்காணும் பிரச்சினையில் பல குழப்பங்கள் நிலவி வருவதால் மக்களால் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ள பிறைக்கணக்குகள் புத்துயிர் பெற்று முஸ்லிம்கள் அதிகமதிமாக அவற்றை தங்களது அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் நல்ல சூழ்நிலை ஏற்படும். இந்த வகையில் அல்லாஹூ ரப்புல் ஆலமீனுடைய கட்டளைப்படி வருடங்களின் எண்ணிக்கையை அறிந்துக் கொண்டு, நேரம் தவறாமையை கடைபிடிக்கும் மக்களாக நாம் வாழத் துவங்கலாம். |
s.m.peermohammed |
No comments:
Post a Comment