வெளிநாட்டில் பயில ஆலோசகரை நாடுகிறீர்களா?-
சுய திட்டமிடல் அவசியம்
ஓர் ஆலோசகரை நாடுமுன், சுயதிட்டமிடல் அவசியம். எந்த பாடத்திட்டம், எந்தத்துறை உங்களுக்கு விருப்பமானது என முடிவு செய்யுங்கள். அந்தத்துறையைத் தேர்ந்தெடுத்ததற்கான அவசியம், காரணத்தை உணருங்கள். எந்தக் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயில விருப்பம். அவ்வாறு தேர்வு செய்த கல்லூரியில் சேர்வதன் மூலம் கிடைக்கும் கூடுதல் பயன்கள் என்ன? வெளிநாட்டில் படிப்பதன் மூலம் அடைய விரும்பும் இலக்கு என்ன? அந்நாட்டில் எந்நகரத்தில் தங்கிப் பயில விரும்புகிறீர்கள்? படிப்பதற்கான நிதிஆதாரம் எப்படி இருக்கிறது என்ற கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள். இந்த அடிப்படையான கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லாமல் ஓர் ஆலோசகரை நாடினால், நீங்கள் தவறான துவக்கத்தில் இருக்கிறீர்கள்.
பெரும்பாலான மாணவர்கள் எல்லாமே ஆயத்தமாக கிடைக்க வேண்டும் என, விரும்புகின்றனர். சுய திட்டமிடலுக்கு நிகரானது வேறெதுவும் இல்லை. ‘பிறரின் அனுசரணையில் வளர்ச்சி பெறும் மனோபாவத்தை இந்திய மாணவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்பதே பிரிட்டிஷ் கவுன்சில் டெல்லி கிளை மேலாளர் முனிஷ் குப்தாவின் கருத்து.
தேர்ந்தெடுக்கப் போகும் துறை பற்றிய தீர்க்கமான முடிவு இருந்தால், அத்துறையில் நீங்கள் செறிவான உயர்கல்வியைப் பெற முடியும். மூன்றாம் நபரின் ஆலோசனை தேவையில்லை. ஆனால், ஆலோசகர் ஒருவரின் உதவியை நாடுவதாக இருந்தால், அவர்களின் சேவையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; முழுமையாக அவர்களை சார்ந்து இராதீர்கள்.
தெளிவான அணுகுமுறையோடு ஆலோசகரைச் சந்தித்தால், நீங்கள் விரும்பும் துறை ஏற்கனவே முடிவு செய்திருக்கும் கல்வி நிறுவனம் தவிர வேறு நிறுவனங்களால் வழங்கப்படுகிறதா? அங்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் என்ன? என்பன போன்ற இதர தகவல்களையும் அவர்களிடம் கேளுங்கள். தேவைகள் பற்றித் தெளிவாக அறிந்து கொண்டிருக்கும் மாணவர்களே, தங்களை சரியான இடத்துக்கு இட்டுச் செல்லும் ஆலோசகர்களைக் கண்டுகொள்ள முடியும். இல்லாவிட்டால், அந்த முகவருக்கு நீங்கள் பணங்காய்ச்சி மரம் மட்டுமே.
நேர்மையான ஆலோசகரைக் கண்டு கொள்ளும் விதம்
நேர்மையான ஆலோசகர் முதலில் உங்களின் விருப்பத்துறை பற்றி அறிந்து கொள்வார். பின்னர், மதிப்பெண்கள் அல்லது தரம் பற்றி ஆய்வு செய்வார். எந்தத்துறையில் புரிந்து கொள்ளும் திறனும், விருப்பமும் இருக்கிறது என்பதுடன், உங்களின் நிதிப் பின்புலத்தையும் பரிசீலிப்பார். அத்துறை சார்ந்த பல பாடத்திட்டங்கள் பற்றி விவாதிப்பார். அவர் உங்களை சுயமாக சில விவரங்கள் சேகரிக்கவும், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்ளவும் உங்களை ஊக்குவிப்பார். உங்களுக்கு பயோ இன்ஜினியரிங் துறை பொருத்தமாக இருக்கும் பட்சத்தில், ஒருபோதும் எம்.பி.ஏ., படிக்க ஆலோசனை சொல்லமாட்டார்.
பரிந்துரை செய்வாரே தவிர, குறிப்பிட்ட கல்லூரியில் சேரும் படி வர்த்தகம் பேசமாட்டார். அக்கல்லூரியைப் பற்றி விளம்பரம் செய்ய மாட்டார்.
தவறான ஆலோசகர்களை இனம்காணல்
இந்நபர்கள் முதலில் உங்களின் மதிப்பெண்ணைச் சரிபார்ப்பர். பின் தங்களிடம் இருக்கும் கல்லூரிகள் பட்டியலில் இருந்து சிலவற்றைப் பரிந்துரைப்பர். சிலர், குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களின் முகவர்களாகவே செயல்படுவர். அதிக கல்விக்கட்டணம் செலுத்த வேண்டிய பாடங்களாக பரிந்துரைப்பர். ஏனெனில் அவர்களுக்கு அதன் மூலம் கமிஷன் கிடைக்கும். சில கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தில் இருந்து ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை முகவர்களுக்குக் கமிஷன் தருகின்றன.
சிலர் 3,000 அமெரிக்க டாலர்களை கமிஷனாகப் பெறுகின்றனர். குறைவான கல்விக்கட்டணம் உள்ள கல்லூரிகளை அவர்கள் பரிந்துரைக்கவே மாட்டார்கள். அவர்களுக்கு அது ஒரு வியாபாரம் அவ்வளவே. அவர்களின் வருமானத்தை மட்டுமே பார்ப்பார்கள். நீங்கள் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த போதும், தரமான கல்லூரிகளைப் பரிந்துரைக்க மாட்டார்கள். ஏனெனில் அக்கல்வி நிறுவனத்தின் முகவராக அவர்கள் இருக்க மாட்டார்கள்.
முகவர்கள் சரியான தேர்வு அல்ல
முகவர்களிடம் ஆலோசனை பெறச் சென்றால், தேர்வு செய்யும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு வரையறைக்குள்ளேயே இருக்கும். சாதாரணமான கல்லூரி ஒன்றில் இடம் கிடைக்கக்கூடும். அதுபோன்ற கல்லூரிகள் சீட் விற்பனையில்தான் ஈடுபடும். தவறான பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்கக்கூடும். படித்து முடித்த பின் கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்து முகவர் பொய்யுரைக்கக்கூடும். மிகைப்படுத்திக் கூறுவார். அந்நாட்டின் கலாச்சார சூழலுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்த மாட்டார்கள். அதிக வாழ்வியல் மற்றும் பயணச் செலவினங்களை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே, உங்களின் வாய்ப்புகளை ஒருபோதும் சுருக்கிக் கொள்ளாதீர்கள். முகவர்கள் பரிந்துரைக்கும் கல்லூரிகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்யும் சூழலுக்கு ஆளாகாதீர்கள். இதுபோன்ற சூழல்களில் சுய திட்டமிடல் மட்டுமே உங்களை வழிநடத்தக் கூடும். ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள், சுய திட்டமிடல் இல்லாமல், மூன்றாம் நபர் ஆலோசனைகள் ஒருபோதும் பலனளிக்காது.
சில எச்சரிக்கைகள்
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் இன்னும் பொருளாதார மந்தநிலையில் இருந்து முழுமையாக மீளவில்லை. இச்சூழலில் ஆசியர்கள் அங்கு வேலைவாய்ப்பு பெறுவது கடினம்; சொந்த நாட்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உங்களின் தகுதிக்கேற்ற வேலை மட்டுமே அங்கு பார்க்க முடியும். நீங்கள் ஒரு பொறியாளர் என்றால், அது தொடர்பான வேலைதான் பார்க்க வேண்டும். ஒரு சில்லறை வர்த்தக நிறுவனத்தில் காசாளராகவோ, வேறு பணிகளோ பார்க்க முடியாது.
*நீங்கள் தவறான கல்விநிறுவனம் அல்லது விருப்பமற்ற துறையில் சேர்ந்ததாக நினைத்தால், வேறு கல்லூரிக்கு மாறுவது மிகவும் சிரமமான விஷயம். கல்லூரிகள்தான் இம்மாற்றங்கள் குறித்து குடியமர்வுத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும். எனவே, ஆரம்பத்திலேயே சரியான கல்லூரியைத் தேர்வு செய்வது முக்கியம்.
அமெரிக்கா, இங்கிலாந்து பற்றிய கூடுதல் தகவல்கள்
இங்கிலாந்தின் கல்விக் கலாச்சாரம் பற்றி புரிந்து கொண்ட பிறகே, அங்கு சேர்ந்து பயில்வது பற்றி முடிவெடுக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசின் அங்கமான பிரிட்டிஷ் கவுன்சில், இங்கிலாந்துக் கல்வி பற்றிய அதிகாரப் பூர்வமான தகவலைத் தருகிறது. டெல்லி பிரிட்டிஷ் கவுன்சில் அரங்கில் புதன் கிழமை தோறும் இங்கிலாந்துக் கல்வி பற்றி தெளிவு படுத்துகின்றனர். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை. பெற்றோர்களுக்கும் அனுமதி உண்டு.
குறிப்பிட்ட இடைவெளியில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து சிறப்பு விருந்தினர்களை வரவழைத்து கல்விக் கண்காட்சி நடத்துகின்றனர். இதுபோன்ற கண்காட்சிக்குச் செல்லும் போது, சில திட்டமிடல்களுடன் செல்லுங்கள். பிரத்யேகமான கேள்விகளுடன் சென்று, இணையதளத்தில் கிடைக்காத தகவல்களை அவர்களிடம் கேட்டுப் பெறுங்கள். செல்லும் போது, கல்விச் சான்றிதழ் நகல்களை எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம்.
பிரிட்டிஷ் கவுன்சில் தனது இணையதளத்தில் சில முகவர்கள், பங்குதாரர்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால், அவர்கள் அனைவரும் பிரிட்டிஷ் அரசால் பதிவு பெற்றவர்கள் அல்ல. உரிமம் பெற்ற முகவர்கள் மட்டுமே சரியான தகவலை உங்களுக்குத் தருவர்.
பிரிட்டிஷ் கவுன்சில் தனது இணையதளத்தில் சில முகவர்கள், பங்குதாரர்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால், அவர்கள் அனைவரும் பிரிட்டிஷ் அரசால் பதிவு பெற்றவர்கள் அல்ல. உரிமம் பெற்ற முகவர்கள் மட்டுமே சரியான தகவலை உங்களுக்குத் தருவர்.
அமெரிக்க கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை ஐக்கிய அமெரிக்கா-இந்தியா கல்வி அறக்கட்டளை (USIEF) போதுமான தகவல்களைத் தருகிறது. 18001031231 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, இந்தி மற்றும் ஆங்கிலம் இருமொழிகளில் தகவல் பெறலாம்.
அங்கீகரிக்கப்பட்ட பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவலுக்கு www.ukba.homeoffice.gov.uk என்ற இணைய முகவரியிலும்; அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவலுக்கு www.educationusa.state.gov மற்றும் www.chea.org என்ற இணைய தளங்களையும் பார்வையிடலாம். ஏதேனும் முகவர் எளிதாக அமெரிக்க விசா பெற்றுத்தருவதாக வாக்களித்தால் நம்பி விடாதீர்கள். ஏனெனில் அதிகாரிகள் இவ்விஷயத்தில் மிகக்கவனமாக இருப்பர். ஒரு முறை விசா மறுக்கப்பட்டால், மீண்டும் பெறுவது மிகக்கடினம்.
No comments:
Post a Comment