விண்வெளியில் அதிகரிக்கும் கழிவுகளால் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து
பூமியில் இருந்து விண்வெளிக்கு உலக நாடுகள் செயற்கை கோள்களை அனுப்புகின்றன. ராக்கெட் மூலம் செலுத்தப்படும் அவை விண்வெளிக்கு செல்லும் போதும், சென்ற பிறகும் பழுதடைகின்றன. இதனால் உடைந்து நொறுங்கும் ராக்கெட்டின் உதிரிபாகங்களும், செயற்கை கோள்களின் பாகங்களும் காற்று இல்லாததால் விண் வெளியில் பூமியை சுற்றி மிதந்தபடி இருக்கின்றன. மேலும் அவை மணிக்கு 28,164 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கி வருகின்றன. இதனால் பூமியை நெருங்கி நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் மீது மோதும் அபாயம் உள்ளது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் டொனால்டு கெஸ்லர் என்பவர் கூறும் போது, கடந்த 2007ல் சீனா அனுப்பிய ராக்கெட் ஒன்று வானிலை செயற்கைக்கோள் ஒன்றை மோதி அழித்தது. இதனால் 1 செ.மீ. அளவுக்கு அதிகமான சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் துண்டுகள் உருவாகின. அதே போல் 2009ல் இரு செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் சுழலும் போது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த இரு நிகழ்வுகளாலும் பூமியை சுற்றி கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு விண்வெளி கழிவுகள் அதிகமாக தேங்கியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் விண்கலத்தில் செயற்கை தோட்டம் அமைக்க நாசா முடிவு
அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களுடன் கூடிய விண்கலத்தை 2030ம் ஆண்டில் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்களுக்கு உணவு வழங்குவது சற்று கடினமான விசயம். இது பற்றி டெக்சாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள நாசாவின ஸ்பேஸ் புட் சிஸ்டம்ஸ் லேபரட்டரியை சேர்ந்த மாயா கூப்பர் என்பவர் கூறும் போது, செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளப்படும் 5 வருட ஆராய்ச்சி பணியில் ஏறக்குறைய ஒரு நபருக்கு 3,175 கி.கிராம் அளவிற்கு உணவு தேவைப்படும். அவர்களுக்கு தொடர்ந்து உணவு அனுப்புவது என்பது திட்டப்பணிகளில் சவாலான ஒன்றாக உள்ளது. எனவே, உணவிற்கு தேவையான கேரட், தக்காளி உள்பட 10 வகையான செடிகள் கொண்ட தோட்டத்தை செவ்வாய் கிரக சூழலுக்கேற்ப அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்கலத்தில் இதனை வளர்க்க குறைந்த இடமே போதுமானது. மேலும், ஆரோக்கியமான உணவு கிடைப்பதுடன் விண்கலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு நீங்கி தேவையான ஆக்சிஜனும் கிடைக்கும் என கூறினார்.
சந்திரனுக்கு புதிய விண்கலம்: அடுத்த மாதம் அனுப்புகிறது நாசா
சந்திரனுக்கு அமெரிக்கா புதிய விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளது. க்ரேய்ன் என பெயரிப்பட்ட இந்த விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கானவெரல் விமான தளத்திலிருந்து அனுப்பப்படுகிறது. ஒன்பது மாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்த விண்கலத்தை ஏவும் பணியில் அமெரிக்காவின் நாசா அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
விண்வெளியில் அதிக சக்தி வாய்ந்த கருந்துளைகள் உள்ளன. இவை தங்களுக்கருகில் இருக்கும் அனைத்தையும் உள்ளிழுத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை. தற்போது அத்தகைய கருந்துளைகளில் ஒன்று நட்சத்திரம் ஒன்றை சிதறடித்து பின் தனக்குள்ளே உள் வாங்கிய அரிய நிகழ்ச்சியை வானியலாளர்கள் முதன் முறையாக கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்துள்ள இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு கண்டறியப்படாதது. பொதுவாக கருந்துளைகளின் மையம் சூரியனைப்போன்று 100 கோடி மடங்கு அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது நடைபெற்ற நிகழ்வில், கருந்துளையானது தன்னிடமிருந்து 3.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த நட்சத்திரத்தை, அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் ஜெட் எனப்படும் தனிப்பட்ட சக்தியால் சிதறடித்து பின் தன்னுள் இழுத்து கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஒளி வெள்ளம் அதனை படம் பிடித்த நாசாவின் ஸ்விப்ட் தொலைநோக்கிக்கு அடுத்த ஒரு வடருடத்திற்கு தேவையான ஒளியை வழங்குமளவிற்கு பிரமாண்டமாய் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளியில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து எக்ஸ் கதிர்களின் அலைவீச்சு அடிக்கடி நிகழ்ந்து வந்ததையும் ஸ்விப்ட் தொலைநோக்கி அவ்வப்போது நாசாவிற்கு தெரிவித்து வந்தது. அதனை தொடர்ந்து ஆராய்ந்ததில் இந்த அரிய நிகழ்வு தற்போது உலகிற்கு தெரிய வந்துள்ளது. மற்றும் நட்சத்திர மண்டலத்தில் 100 மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற நிகழ்வு நடைபெறும் என பென்சில்வேனியா மாநில பல்கலைகழகம் மற்றும் ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் வானியல் அமைப்பு ஆகிய குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கேயும் அதே கதைதான் ! சிம்பன்ஸிகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே புத்திசாலிகள்
பெல்ஜியம் நாட்டில் இரு உயிரியல் பூங்காவில் உள்ள ஆண், பெண் மனிதக்குரங்குகளுக்கிடையே உள்ள திறமைகளைக் கண்டுகொள்ள நடத்தப்பட்ட ஆறு போட்டிகளில் பெண் சிம்பன்ஸிகளே தன் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டி வெற்றி பெற்றது. பெண் சிம்பன்ஸிக்கள், போட்டிக்காக சற்று கைக்கு எட்டாமல் சற்று தொலைவில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள், கொட்டைகள் ஆகியவற்றை எடுக்க சின்ன மரக்கிளைகள், குச்சிகள் போன்றவற்றின் துணைகொண்டு அந்த பழங்களையும், கொட்டைகளை லாவகமாக எடுத்ததுடன் அல்லாது, சிறு கற்கள் மூலம் பழக்கொட்டைகளை மிகவும் இயற்கையாக உடைத்துத் தின்றது. ஆண் சிம்பன்ஸிக்கள் தன் மூர்க்கத்தனத்தையும், ஆண் ஆதிக்கத்தன்மையின் மூலமாகத்தான் பெண் சிம்பன்ஸிக்களை வெற்றி கொள்ளும் என்று நினைத்திருந்தனர் போட்டி அமைப்பாளர்கள். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, ஆண் சிம்பன்ஸிகளோ பெண் சிம்பன்ஸிகளோடு போட்டிகளை தவிர்த்து, இனக்கவர்ச்சி மூலம் வெற்றிகொள்ளும் உத்திகளையே கையாளத்துடித்தது. இது வழக்கமாக ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் என்னும் மனித இயல்புகளை நிரூபிப்பதாகவுள்ளது என்றும், ஆனால், இந்த ஒருசில போட்டிகளின் மூலம் மனித இனங்களின் திறமைகளையும், ஜீன்களின் பண்புகளைப் பற்றியும் இறுதியான முடிவு எட்டிவிடமுடியாது என்று இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்த ஸ்டீவன் என்பவர் தெரிவித்துள்ளார்.
பூமியின் மிக பழமையான தொல்லுயிர் படிவம் ஆஸ்திரேலியாவில் உள்ளதாக ஆய்வில் தகவல்
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேவிட் வாசி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சுமார் 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பாக்டீரியாவின் தொல்லுயிர் படிவம் ஆஸ்திரேலியா நாட்டின் பில்பரா பகுதியில் அமைந்த ஸ்ட்ரெல்லி நதிக்கரையில் கிடைத்துள்ளது. இதுவே உலகின் மிக தொன்மை வாய்ந்த உயிரி படிவம் ஆகும். சாதாரண கண்களால் பார்க்க இயலாத இந்த பாக்டீரிய படிவத்தை மைக்ரோஸ்கோப் வழியே எளிதாக கண்டுணர முடியும். இது பற்றி டேவிட் கூறும் பொழுது, 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடும் வெப்பமான, உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இல்லாத சூழல் காணப்பட்டது. அத்தகைய நிலையில் ஏதேனும் ஒரு வழியில் உயிரிகள் வாழ்ந்தாக வேண்டும். அப்பொழுது எரிமலை வெடித்து வெளிப்பட்ட குழம்பில் அதிகம் நிறைந்த கந்தக பொருள்களை இத்தகைய பாக்டீரியாக்கள் சுவாசித்து வாழ்ந்திருக்க வேண்டும் என கூறுகிறார்.
உலகிலேயே மிக நீளமான பெரிஸ்கோப்பு கல்பாக்கத்தில் அமைப்பு
தமிழ் நாட்டின் கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் உலகின் மிக நீளமான, அதாவது 10 மீட்டர் நீளம் கொண்ட பெரிஸ்கோப்பு ஒன்று ரூபாய் 4 கோடி மதிப்பில் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் இயக்கி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வு மையத்தில் அதிக எண்ணிக்கையில் ரியாக்டர்கள் இயங்கி வருகின்றன. இந்த ரியாக்டர்களின் பராமரிப்புப்பணிகளை பார்வையிட, ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயங்கும், இந்த பெரிஸ்கோப்புகள் பயன்படும் என தெரிய வருகிறது. அணுவை பிளந்து, வெப்பத்தை உருவாக்கி, நீராவியை தயார் செய்யும் அனைத்து பணிகளையும் செய்பவவைதான் இந்த ரியாக்டர்கள். இந்த ரியாகடர்களின் பராமறிப்பு பணியை கண்களால் நேரடியாக பார்வையிட முடியாது. இதனை சாத்தியமாக்கவே இந்த பெரிஸ்கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
கடல் வாழ் உயிரினங்கள் எழுப்பும் ஒலி குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
கடல் வாழ் உயிரினங்கள் கடலில் பிரயாணிக்கும் பொழுது தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி கொள்வதற்கு சப்தத்தை எழுப்பும். உதாரணமாக, சில திமிங்கல வகைகள் முனங்குவது போலவும், கத்துவது போலவும் ஒலியெழுப்பி ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுத்தி கொள்வது வழக்கம். கடல் பரப்பில் மனிதனின் தாக்கம் பல வருடங்களாக அதிகரித்துள்ள நிலையில், அதனால் கடல் வாழ் உயிரினங்களின் தகவல் தொடர்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து கடல் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது, இது பற்றி வரும் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 01 ஆகிய தினங்களில் பாரிஸ் நகரில் அமைந்த யுனெஸ்கோ அமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில் விரிவாக விவாதம் நடத்தப்படும் என ஐ.நா. கழகம் தெரிவித்துள்ளது. 21.8.2011 10.20 PM
தலைமுடிக்கு ஜெல் பயன்படுத்திய பழங்கால எகிப்தியர்கள்: ஆய்வில் தகவல்
இங்கிலாந்து நாட்டிலுள்ள மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் தொல்லியல் துறை நிபுணரான நடாலி மேக்கிரீஷ் என்பவர் தலைமையில் எகிப்து நாட்டின் மம்மிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்ட 18 மம்மிகளில் பெரும்பாலானவை கிரேக்க மற்றும் ரோமானிய காலத்தின்படி 2,300 வருடங்களுக்கு முற்பட்டவை. அதில் மிக பழமையான மம்மியின் வயது 3,500 ஆகும். இந்த மம்மிகளில் ஆண், பெண் என்று 4 வயது முதல் 58 வயது வரையிலானவர்கள் அடங்குவர். மைக்ரோஸ்கோபி முறையில் ஒளி மற்றும் எலக்ட்ரான்களை பயன்படுத்தி ஆராய்ந்ததில் 9 மம்மிகளின் தலை முடியில் கொழுப்பு போன்ற பொருள் பூசப்பட்டு இருந்தது. ஆய்வில், அது பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக் வகையை சேர்ந்த கொழுப்பு அமிலங்கள் என தெரிய வந்தது. ஜெல் வடிவில் பயன்படுத்தப்பட்ட அவை எதிலிருந்து எடுக்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. எனினும் தற்போது, எகிப்து நாட்டவர்கள் பழங்காலத்திலேயே தங்கள் தலைமுடியினை அழகாக பராமரித்து வந்துள்ளனர் என்பதும் மம்மிகள் உருவாக்கத்திலும் அந்நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்பதும் ஆய்வின் வழியாக தெரிய வந்துள்ளது. 21.8.2011 9.36 PM
ஜிப்பான்கள் தாவிக்குதிக்கும் ரகசியம்
குரங்குகள் பலவிதம். ஏப் இனத்தை சேர்ந்த ஜிப்பான் என்பது ஒரு வகை குரங்கு. இவற்றின் கைகள் வெள்ளையாக இருப்பதனால் இது வெள்ளைக்கை ஜிப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஜிப்பான்கள் தரையிலிருந்து மேலெழும்பி சுமார் 3 மீட்டர் உயரம் தாவிக்குதிக்கும் திறன் பெற்றது. மனிதர்களுக்கு உடம்பில் 11 சதவீதம் கைகளின் எடை. ஆனால், ஜிப்பான்களுக்கு இது 17 சதவீதமாம். எனவே, தங்களது பலம் வாய்ந்த கைகளை அசைத்து, வீசி ஒரு அசுர பலத்தை ஏற்படுத்தி இவை தாவிக்குதிக்கின்றன. அப்படி செய்யும் போது அவற்றின் உடல் எடையின் புவி மையம் கைகளுக்கு வந்து விடுகிறதாம். அதுவே இவை இவ்வளவு உயரம் தாவிக்குதிப்பதற்கு தேவையான சக்தியை தருகிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். ஃப்ளீ என்பது ஒரு வகையான ஒட்டுண்ணிகள். இவை 1.5 மில்லி மீட்டரிலிருந்து 3.3 மில்லி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. ஆனால், ஆச்சரியமாக இவை தங்களது உடலின் நீளத்தை விட 200 மடங்கு தூரத்தை அதாவது, 18 செ மீ உயரத்தை அல்லது 33 செ மீ நீளத்தை, ஒரே தாவலில் தாவி விடும். மிக அதிக உயரம் துள்ளிக்குதிக்கும் உயிரினம் இது தான். பொதுவாக நீண்ட தூரம் தாவிக்குதிக்கும் பிற உயிரினங்கள் வெட்டுக்கிளி மற்றும் ஃப்ளீ. ஆனால், இவை தாவிக்குதிப்பதற்கும் இந்த ஜிப்பான்கள் தாவிக்குதிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருப்பதாக இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 20.8.2011 10.15 AM
வெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி
வெளவால்கள் எவ்வாறு திசைகளை கண்டுபிடித்து பறக்கின்றன என்பதை கண்டறிய ஒரு ஜி.பி.எஸ். கருவியை ஜெருஸலம் பல்கலை கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தங்களது இலக்குகளை திறம்பட நிர்ணயம் செய்வதில் வீட்டுப்புறாக்களை விட பழ வெளவால்கள் திறமையானவை என இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்திலுள்ள பழ வெளவால்கள், மலைகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்களில் தெரியும் வெளிச்சம் போன்றவற்றை அடையாளமாக வைத்தே வேறிடத்துக்கு செல்லவோ அல்லது மீண்டும் அதே இடத்துக்கு திரும்பி வரவோ செய்கின்றனவாம். வெளிச்சம் இல்லாத காலங்களில் அவை ஏதோ ஒரு உள்ளுணர்வின் அடிப்படையில் தங்களது இலக்குகளை மிக துல்லியமாக கணிக்கும் ஆற்றல் பெற்றவை என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சில வெளவால்களின் மீது ஒரு ஜி.பி.எஸ் கருவியை இணைத்து அவற்றை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பறக்க விட்டார்கள். அவை சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு பழ மரத்திற்கு பறந்து சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தன. அதிசயமாக, அதே போன்ற பழ மரங்கள் வெளவால்கள் பறந்து சென்ற வழியில் வெகு அருகில் இருந்தாலும் அவை தாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு குறிப்பிட்ட மரத்திற்கே சென்று வந்தது தெரிய வந்தது.
இன்னும் சுவாரசியமாக, பட்டினியாய் சிலவற்றையும் இறையெடுத்த சில வெளவால்களையும் தங்களது இருப்பிடத்தைவிட்டு வெகு தொலைவுக்கு கொண்டு சென்று பறக்க விட்ட போது, இறையெடுத்தவை தங்களது சரியான இருப்பிடத்துக்கும், பட்டினியாய் இருந்தவை வழக்கமாக செல்லும் பழ மரங்களுக்கு சென்று பின்னர் தங்களது இருப்பிடத்துக்கு திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 19.8.2011 11.08 AM
டிராகன் விண்கலன் நவம்பர் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடம் செல்கிறது
விண்வெளியில் மிக பெரிய சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடம் அமையவுள்ளது. 1998 ல் தொடங்கப்பட்ட இந்த ஆய்வுக்கூட அமைப்புப்பணி 2012 முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது. தாவரம் மற்றும் மனிதர்கள் குறித்த ஆய்வுகளும் வானியல், புவியியல் குறித்த ஆய்வுகளும் நடத்துவதற்காக பயன்பட இருக்கிற இந்த ஆய்வுக்கூடம் 2028 ஆம் ஆண்டு வரை செயல்படத்தக்க வகையில் அமையவுள்ளது. இதன் அமைப்புப்பணிகளுக்கு தேவையான விண்கலங்களை இதுவரை அமெரிக்காவின் நாசா நிறுவனம் தயாரித்து வழங்கி வந்தது. நாசா தனது விண்கல தயாரிப்புப்பணிகளை தற்போது நிறுத்திக்கொண்டதனால், இந்த இன்டர்நேஷனல் விண்வெளி ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சரி செய்ய ஸ்பேஸ் எக்ஸ் என்னும் தனியார் நிறுவனம் விண்கலங்களை தயாரித்து வழங்க முன் வந்துள்ளது. இதற்கான அனுமதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்வுப்பணியில் இது போன்ற ஒரு தனியார் நிறுவனம் பங்கு பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ்ஸின் முதல் தயாரிப்பான டிராகன் விண்கலன் எதிர் வரும் நவம்பர் மாதம் விண்வெளியில் செலுத்தப்பட்டு அங்கு ஆய்வுக்கூடத்துடன் இணைக்கப்படும் என தெரிகிறது.
விண்வெளியில் ஓட்டல் அமைக்க ரஷ்யா திட்டம்
விண்வெளியில் செயற்கை முறையில் ஓட்டல் ஒன்றை நிர்மாணிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. பூமியிலிருந்து 217 மைல்கள் உயரே அமையவிருக்கும் இந்த ஓட்டலில் ஒரு நேரத்தில் 7 பேர் தங்கும் வகையில் நான்கு அறைகள் மற்றும் பூமி கீழே சுற்றுவதை எளிதாக பார்க்கும் வகையில் அமைந்த பெரிய ஜன்னல்கள் ஆகியவை இடம் பெறும். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் உதவியுடன் 2 நாட்கள் பயணம் செய்து இதனை அடையலாம். விண்வெளி சுற்றுலா செல்ல விரும்பும் பணக்காரர்கள், விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வோர் ஆகியோருக்கு ஏற்ற வகையில் உருவாகும் இதில் 5 நாட்கள் தங்குவதற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் பவுண்டுகள் வரை செலவாகும். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் அவசர காலத்தில் பூமிக்கு திரும்புவதற்கு பதிலாக தங்குமிடமாகவும் இந்த ஓட்டல் இருக்கும். இதனை ஆர்பிடல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்குகிறது. வரும் 2016-ம் ஆண்டிற்குள் இதன் பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17.8.2011 5.18 PM
போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்க புதியவகை ரோபோக்கள்
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கிய ரோபோ ஒன்று மனிதர்களைப்போலவே நடக்கவும் ஓடவும் செய்கிறது. மேபெல் என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ மணிக்கு 6.8 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் பெற்றது.
ஜெஸ்ஸி க்ரிஸ்ஸில் மற்றும் ஜோனதன் ஹர்ஸ்ட் என்ற இருவர் இந்த ரோபோவை வடிவமத்தவர்கள். அதன் பின், கவுசில் ஸ்ரீநாத் என்ற இந்திய முதுகலை பட்டதாரியும் ஹேவொன் பார்க் என்ற மற்றொரு விஞ்ஞானியும் இணைந்து மேபெலுக்கு ஓடக்கற்றுக்கொடுத்தார்கள். மேபெல் ஒரு பெண்ணைப்போல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் உடற்கூறு மற்றும் அமைப்பை ஒத்துள்ள மேபெல்லின் கால்கள் ஓடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இந்த ரோபோவின் மீதான அடுத்தகட்ட ஆராய்ச்சியில், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருப்பவர்களை எழுந்து நடக்க வைக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பது தான் என இதனை வடிவமைத்தவர்கள் கூறுகின்றனர். அதே நேரம், ஒரு சூப்பர் மேனைப்போல் விண்ணில் தாவிப்பறக்கும் ஆற்றல் கொண்ட ரோபோக்களை வடிவமைத்து ஆபத்துக்காலங்களில் மீட்புப்பணிகளுக்கு பயன்படுத்தவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேபெல்லை அடுத்து இதே வரிசையில் உருவாகவுள்ள ரோபோக்கள் விலங்குகளைப்போல் விரைந்து ஓடும் என்று கூறப்படுகிறது. இந்த வகை ரோபோக்கள் போக்கு வரத்து பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையுமென்று கவுசில் ஸ்ரீநாத் கூறியுள்ளார். இந்த ரோபோக்களின் மீது மனிதர்கள் குதிரை சவாரி செய்வது போல் பயணம் செல்லலாம். அதிக பொருட்செலவில் சாலைகள் அமைக்கவோ வாகனங்களை தயாரிக்கவோ தேவையில்லை என்பதனால் போக்கு வரத்து பிரச்சனை சுலபமாக தீர்க்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
விண்வெளியில் உயரங்களை துல்லியமாக கணிக்க இயலாத மனித மூளை
வரை படங்களையும் இடங்களையும் பூமியில் சரியாக புரிந்து கொள்ளும் மனிதன், விண்வெளியில் ஓரிடத்தின் லட்டிட்யூட் மற்றும் லாங்கிடியூட் போன்றவற்றை சரியாக புரிந்துகொள்வதில்லையாம். இது விண்வெளி வீரர்களுக்கு பிரச்சனை தரும் விஷயம் என்பது அனுபவ உண்மை. லண்டன் யுனிவர்ஸிடி காலேஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை ஒரு ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில் ஹிப்போகேம்பஸ் எனப்படும் செல்கள் உள்ளன. ஒரு வரைபடத்தை புரிந்து கொள்ளும் திறனை மனிதனுக்கு தருகிற இந்த செல்களே மேற் சொன்ன ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயரமான கம்பம் ஒன்றில் ஒரு எலியை ஏற வைத்து, அது எவ்வளவு உயரத்தில் நிற்கிறது என்பதை கூறும்படி ஆராய்ச்சியில் பங்கு பெற்றவ்ர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களால் அந்த உயரத்தை உத்தேசமாகக்கூட கணிக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. விண்வெளியில் தட்டையான பகுதிகளை சரியாக கணிக்க முடிகிற மனித மூளையினால் முப்பரிமாணம் கொண்ட உயரத்தை சரிவர திட்டமிடமுடியவில்லை என்பது தான் இவர்களது முடிவு.
துணைக்கோள் இல்லாவிட்டாலும் கிரகங்களுக்கு பாதிப்பில்லை
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பூமி அதன் அச்சில் உள்ள நிலைப்பாடு குறித்து இதாஹோ பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பூமிக்கு துணைக்கோள் இல்லாத நிலையிலும் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் மற்ற கோள்களுக்கும் துணைக்கோள் என்பது அவசியமில்லை என்றும் அதனால் கோள்களின் நிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது என்றும் அது தெரிவிக்கின்றது. இதுவரையில், துணைக்கோள் இல்லையெனில் பூமி தன் அச்சிலிருந்து சிறிது விலக நேரிடும் என்றும், அதனால் சூரிய ஒளி துருவ பகுதிகளில் விழுந்து பருவகால நிலைகளில் பெரிய மாற்றம் நிகழும் எனவும் எனவே உயிரினங்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படும் என்றும் அறிவியலாளர்கள் நம்பி வந்துள்ளனர். தற்போது, இந்த ஆராய்ச்சி முடிவால் பூமி அதனுடைய துணைக்கோள் இன்றியும் தன் அச்சில் சீராக இயங்கும் என தெரிய வந்துள்ளது.
ஒருவருக்கு அறிவாற்றல் எங்கிருந்து வருகிறது?
வளரும் விதமும் கல்வியறிவும் தான் ஒருவரது அறிவாற்றலுக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அறிவுத்திறனில் பாதி பாரம்பரியமாக பெற்றோரிடமிருந்தே வருகின்றது என்று கூறுகிறது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஏறத்தாழ 3500 பேரை இந்த ஆய்வுக்குட்படுத்தி ஒருவரது அறிவுத்திறன் அல்லது அறிவுத்திறனின்மை இரண்டுமே பெற்றோரிடமிருந்தே வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல் கிஸ்டலைஸ்டு இண்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் ஒருவரது தனித்திறன்களுக்கு காரணமாய் அமைவது அவரது ஜீன்களே! ஒரு சிக்கலான சூழ்நிலையில் பகுத்தாயும் திறன் மற்றும் கற்பனைக்கப்பாற்பட்ட விஷயங்களை புரிந்து கொள்ளும் திறன் இவையெல்லாம் ஒருவரது DNA வின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை அறிவுக்கு ஃப்ளூய்ட் டைப் இண்டெல்லிஜென்ஸ் என்று பெயர். இந்த ஆய்வினை மேற்கொண்டது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் ரிஸர்ச் என்ற அமைப்பு.
சிஸ்டிக் பைப்ரோசிஸ் வியாதிக்கு விரைவில் புதிய மருந்து: எப்.டி.ஏ. பரிசீலனை
சுவாசம் மற்றும் செரிமான உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வியாதி சிஸ்டிக் பைப்ரோசிஸ் என அழைக்கப்படுகிறது. மரபு கோளாறினால் ஏற்படும் இந்த வியாதிக்கு காரணமான மரபணு கடந்த 1989ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டது. தற்பொழுது, நோயினை தீர்க்க நம்பிக்கை ஏற்படும் வகையில் அமைந்த இந்த ஆய்வின் அடிப்படையில், நோய்க்கான மருந்தினை பற்றி இந்திய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் (எப்.டி.ஏ.) இந்த வருடத்திற்குள் இறுதி முடிவெடுக்கும் என தெரிகிறது.
எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிய புதிய கருவி
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கொலம்பிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிவதற்காக பிளாஸ்டிக்கால் ஆன கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி 100 சதவீதம் துல்லியமாக செயல்படுவதுடன் 15 நிமிடங்களில் முடிவை தெரிவித்து விடுகிறது. இதற்காகும் செலவும் (ஒரு டாலர்) மிக குறைவாகும். கிரெடிட் கார்டு வடிவிலான இந்த கருவி அதிக வரவேற்பை பெறும் என தெரிகிறது.
வியாழன் கோளை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட நாசா விண்கலம் ஜுனோ
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் புளோரிடா மாகாணத்தில் கேப் கேனவெரல் என்ற இடத்திலிருந்து ஜுனோ என்ற பெயரிடப்பட்ட விண்கலம் ஒன்றை வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ள அனுப்பியுள்ளனர். இது மணிக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்து கோள்களின் அரசன் என்றழைக்கப்படும் வியாழனின் மையப்பகுதிக்கு சென்றடையும். பின்னர் அதன் உட்புற பகுதிகள், வியாழனின் வளிமண்டலம் மற்றும் அதன் காந்தப்புல வலிமை ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளும். இந்த ஆய்வின் தலைவர் ஸ்காட் போல்டன் கூறும் போது, சூரிய குடும்பம் உருவானது எவ்வாறு என்பது உள்பட பல ரகசியங்கள் வியாழன் கோளில் மறைந்துள்ளன. எனவே இந்த ஆராய்ச்சியின் மூலம் பல அரிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என தெரிவித்தார். இந்த ஆய்வுக்கு 1.1 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இந்த விண்கலத்துக்கு ஜுனோ என்று பெயரிடப்பட்டது சற்று சுவாரசியமானது. ரோம பெண் கடவுளான ஜுனோ வியாழனின் மனைவி ஆவார். இவர் வியாழனை பற்றி உளவு பார்த்ததாக கூறப்படுவதுண்டு. அதனடிப்படையில் இந்த விண்கலத்திற்கு ஜுனோ என பெயர் வைத்துள்ளனர்.
விரல்ரேகை மூலம் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் புதியமுறை
குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகை. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம் ஒன்று கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக்கொடுத்து விடுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்டு ஹாலம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். குற்றவாளியின் பழக்க வழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக்கொடுத்துவிடுகிறது இந்த புதிய கைரேகை ஆய்வு. இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப் படவுள்ள இந்த கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இதுவரையிலும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம். விரல்களால் தொடும் பொருட்களின் நுண்ணிய துகள்கள் விரலில் ஒட்டிக்கொள்ளுமாம். அது மட்டுமல்லாமல், உடலில் சுரக்கும் திரவங்கள் கூட விரல்களில் தங்கி விடுவதுண்டாம். எனவே, ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும் என்கிறது இந்த ஆய்வு.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சான்று: நாசா கண்டுபிடிப்பு
பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். தற்போது செவ்வாய் கிரகத்தில் உவர்ப்புத் தன்மை கொண்ட தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் வெப்பமான பருவத்தில் சிறிதளவில் தண்ணீர் ஆங்காங்கே தென்படுகிறது. இது உப்புத்தன்மை கொண்ட தண்ணீராக இருப்பதால் ஆவியாகி மறைந்து போகாமல் தேங்கி நிற்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்றும், பனிக்கட்டி நிலையை விட திரவவடிவில் இருப்பது உயிர்களின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கிய அம்சமாக கருதப்படுகிறது என்றும் நாசா ஆராய்ச்சி மையத்தின் குழுவில் உள்ள நாசா விஞ்ஞானி கிறிஸ்டன்சென் கூறியுள்ளார்.
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு இரு நிலவுகள்: ஆய்வாளர்கள் கருத்து
சூரிய மண்டலத்தில் உள்ள பூமியினை சுற்றி துணைக்கோளாக நிலவு சுற்றி வருகிறது. ஆனால் கலிபோர்னிய பல்கலைகழக ஆய்வாளர்களின் தகவல்படி, பூமிக்கு இரு நிலவுகள் இருந்துள்ளன என தெரிய வருகிறது. அவர்களது கருத்தின்படி, பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரக அளவில் ஒரு பருப்பொருளானது பூமியின் மீது மோதி பல சிதைவுகளாக சிதறி போனது. பின் ஈர்ப்பு விசையின் காரணமாக சிதைவுகள் இணைந்து நிலவு மற்றும் அதை விட சிறிய மற்றொரு நிலவு தோன்றியுள்ளது. இவை சுற்று வட்ட பாதையில் பயணித்த பொழுது ஒன்றுடன் ஒன்று மோதல் நடைபெற்றுள்ளது. மெதுவாக நடைபெற்ற அந்த மோதலால் தற்போதுள்ள நிலவில் பெரிய பள்ளங்கள் ஏதும் காணப்படவில்லை. ஆனால் மலை முகடுகள் போன்ற பகுதிகள் ஏற்பட்டுள்ளன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நோயாளிகளை தூக்கி செல்ல உதவும் புதிய ரோபோ: ஜப்பானில் கண்டுபிடிப்பு
தொழில்நுட்ப துறையில் மிக வேகமாக முன்னேறி வரும் ஜப்பான் சமீபத்தில் புதிய வகை ரோபோ ஒன்றை தயாரித்துள்ளது. ரிபா2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ரப்பர் சென்சார்கள், அனைத்து பக்கங்களிலும் இயங்க சக்கரங்கள் மற்றும் ஸ்பிரிங்குகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கட்டளைகளின் அடிப்படையில் செயல்படும் இது அதிகபட்சமாக 80 கிலோ கிராம் எடையுள்ள மனிதர்களை தூக்கும் திறன் கொண்டது. பெரும்பாலும் படுத்த நிலையில் இருக்கும் நோயாளிகளை சக்கர நாற்காலி மற்றும் படுக்கைக்கு தூக்கி செல்வதற்கு பயன்படுகிறது. மனிதர்களை மென்மையாக கையாளும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வெஸ்டா எரிகல்லை ஆய்வு செய்யும் டான் விண்கலம்
அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2007ம் ஆண்டு டான் என்ற விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பினர். அது எரிகல் பற்றிய ஆய்வில் இதுவரை சிரீஸ் மற்றும் வெஸ்டா ஆகியவற்றை ஆராய்ந்துள்ளது. பூமியிலிருந்து 117 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள வெஸ்டாவின் செயல்பாடுகள் தற்போது புகைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 500 புகைப்படங்களை டான் எடுத்து தள்ளியுள்ளது. இந்த புகைப்படங்களில் வெஸ்டா எரிகல்லில் உள்ள பனி மனிதன் போன்று காணப்படும் குழிகள் உட்பட 3 பெரிய பள்ளங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
மனித மூளை பரிணாம வளர்ச்சியின் உச்சத்தை அடைந்து விட்டது: ஆராய்ச்சியில் முடிவு
இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ பேராசிரியர் எட் புல்மோர் மனித மூளையின் வளர்ச்சி பற்றி ஆய்வு மேற்கொண்டார். அதில், மனிதன் தனது மூளையின் ஆற்றலால் விண்வெளிக்கு விண்கலங்கள் அனுப்புதல், கணினி செயல்பாடு, செயற்கை உடல் உறுப்புகள் பயன்பாடு என பல்வேறு ஆச்சரியமூட்டும் செயல்களை செய்து வருகிறான். எனினும் அதற்கு துணைபுரியும் மூளையின் பரிணாம வளர்ச்சியில் மேலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் கூறுகிறார். தொடர்ந்து அவர் கூறுகையில், மனிதன் எடுத்து கொள்ளும் ஆற்றலில் பெரும்பங்கு மூளைக்கே அதிகமாக செலவிடப்படுகிறது. அதிலும், பின்னி பிணைந்து நெருக்கமான நரம்பு மண்டலங்களை கொண்ட மூளையானது மிக விரைவாக கட்டளைகளை உடனுக்குடன் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அத்தகையோரே சிறந்த அறிவாளிகளாக உள்ளனர். இந்நிலையில் மூளை மேலும் அதிக ஆற்றல் பெற்று செயல்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் அதன் பரிணாம வளர்ச்சியானது உச்சத்தை அடைந்து விட்டது என்றும் தெரிவிக்கின்றார்.
டி.கே.7 எரிகல்லால் பூமிக்கு ஆபத்து இல்லை: நாசா
அமெரிக்காவை சேர்ந்த நாசா அறிவியலாளர்கள் கடந்த 2009-ம் ஆண்டு வைஸ் என்ற தொலைநோக்கியை செயற்கைகோள் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பினர். அது பூமியை சுற்றிலும் இயங்கும் பல்வேறு நடவடிக்கைகளை பற்றி ஆராய்ந்து வருவதோடு எரிகற்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளையும் அறிந்து தகவல்களை அறிவியலாளர்களுக்கு அனுப்பி வருகிறது. ஏறக்குறைய கிடைத்த 500 வகையான தகவல்களில் 123 அறிவியலுக்கு புதியவை. இதில் 2010 டி.கே.7 என்ற எரிகல்லும் அடங்கும். சுமார் 200 முதல் 300 மீட்டர்கள் அகலம் கொண்ட இந்த எரிகல்லானது டிராஜன் எரிகல் எனறும் அழைக்கப்படுகிறது. தற்போது பூமியிலிருந்து 80 மில்லியன் கி.மீ. தொலைவில் சுற்றி வரும் இதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் இன்னும் 10 ஆயிரம் வருடங்களுக்கு தனது பாதையில் நிலையாக சுற்றி வரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அணு பொருள் பற்றிய ஹிக்சின் கோட்பாட்டிற்கு அடுத்த வருட இறுதிக்குள் தீர்வு
ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ். இவர் கடந்த 1964-ம் ஆண்டு, இயற்பியலின் ஸ்டாண்டர்டு மாடல் என்ற பகுதியை அடிப்படையாக கொண்டு ஓர் அணுவிற்கு நிறையை தரும் கண்ணுக்கு புலப்படாத பொருள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அந்த பொருள் அறிவியல் உலகில் கடவுள் பொருள் (காட் பார்டிகிள்) என அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட தியரியை, செய்முறை விளக்கத்தின்படி செயல்படுத்திட கடந்த 2008ல் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கிடையே பூமியில் 300 அடி ஆழத்தில், அணு துகள்களை இரு கற்றைகளாக ஒளியின் வேகத்திற்கு ஈடாக அதிக சக்தி வாய்ந்த காந்தங்களின் வழியே பாய்ச்சினர். பின்னர் அவை ஒன்றுடன் ஒன்று மோதச்செய்யப்பட்டன. ஆனால் இச்சோதனையில் ஹீலியம் கசிவு மற்றும் பிற காரணங்களால் ஆய்வு தடைபட்டது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. தற்போது, ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் ரால்ப் & டையடர் ஹியூர், "இது பற்றி அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான தீர்வினை நெருங்கியுள்ளோம். அடுத்த வருட இறுதிக்குள் ஹிக்சின் தியரிக்கு சரியான விடை கிடைத்து விடும் என்றார். இதனால் அண்டத்தில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் விண்வெளியின் கருப்பொருள் ஆகியவற்றுக்கு விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 வகை பதார்த்தங்கள்: சமையலறையில் புதிய வரவு சூப்பர்செப்
அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயனாக மாவு அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என பல வேலைகளை பகிர்ந்து கொள்வதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன. தற்போது சமையலறைக்கு வந்துள்ள புதிய வரவு சூப்பர்செப். வறுத்தல், கொதிக்க வைத்தல், வேக வைத்தல் என பல வேலைகளை செய்யும் இந்த நவீன கருவி ஏறத்தாழ 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கிறது. தேவையான சமைக்கும் பொருள்களை அதற்கென்று உள்ள பாத்திரத்தில் போட்டு விட்டு பட்டனை தட்டி விட்டால் போதும். சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் சுவையான உணவு தயாராகி விடும். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 24 மணி நேரங்களுக்கு பின் சமையல் செய்ய வேண்டியதை முன்கூட்டியே புரோகிராம் செய்யும் வசதி உள்ளது. மேலும் உணவு தயாரானவுடன் அதனை வெளியே எடுக்காமல் விட்டு விட்டாலும் பொறுப்பாக நீண்ட நேரம் உணவை சூடாக வைத்து கொள்ளும் பணியை மேற்கொள்கிறது. சிறிய கிண்ணம், நீரை சூடாக்க பாத்திரம் மற்றும் சமையல் புத்தகம் ஆகியவற்றுடன் விற்பனைக்கு வரும் இதன் சிறப்பம்சங்களை பட்டியலிட்டால், தேவையல்லாத இடத்தை அடைக்கும் அதிகப்படியான பாத்திரங்களை சமையலறையில் அடுக்க வேண்டாம். சமைத்து முடிக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டாம். மேலும் இதன் வடிவமைப்பு எங்கும் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஆண்களின் மலட்டு தன்மைக்கு காரணமான புரோட்டின்
ஆண்களின் விந்தணுவை கவசம் போல் காத்து வருகிறது ஒருவிதமான புரோட்டீன். இதற்கு DEFB126 என பெயர். இந்த வகை புரோட்டீன் தான் விந்தணு பெண்களின் கரு முட்டையை சரியாக சென்று சேர்வதையும் உறுதிப்படுத்துகிறது. இந்த புரோட்டீனின் செயல்பாடுகள் குறைந்து போவது ஆண் மலட்டுத்தன்மைக்கான பல காரணங்களுள் ஒன்று என அமெரிக்காவின் யூ சி டேவிள் பொடேகா மரைன் லாபரட்டரீஸ் மற்றும் சுற்று சூழல் சுகாதார மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வில், ஆண்களில் 25 சதவீதம் பேருக்கு இந்த புரோட்டின் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
மனிதனின் தோற்றம் குறித்து ஆராய்ச்சியில் புதிய தகவல்
விலங்குகளிலிருந்து மாறுபட்டு, மனிதன் எப்போது தரையிலிருந்து கைகளை தூக்கி எழுந்து, நிமிர்ந்து கால்களை ஊன்றி நிற்கவும், நடக்கவும் ஆரம்பித்தான்? இதுவரையிலும் கிடைத்த ஆதாரங்களின்படி சுமார் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்பதுதான் நாமறிந்த தகவல். ஆனால் 3.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கால் தடம் பதித்த மனிதன் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது. தான்சேனியாவிலுள்ள லேடோலி என்னுமிடத்தில் பாறைப்படிமங்களில் 11 மனித கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கால் தடங்கள் சிம்பன்சிக்கள், உரங்க்-உட்டான்கள் மற்றும் கொரில்லாக்களின் பாத அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன. இதற்கு முன்பு இதே போல் காணப்பட்ட காலடி சுவடுகள் ஒன்றே ஒன்றாக இருந்ததனால் அவற்றை ஒப்பிட்டுப்பார்ப்பது இயலாமல் போயிற்று. ஆனால், தற்போது கிடைத்துள்ள 11 சுவடுகளினால் ஒப்பிட்டுப்பார்ப்பது சுலபமாகி இருக்கிறது. இன்றைய நாகரீக மனிதனுக்கு இதுவே முன்னோடி என்று கருதப்படுகிறது.
ஆதிமனிதன் இரண்டே பிரிவு தான் என்பது நாம் அறிந்தது. ஒன்று ஆப்பிரிக்காவை மையமாக கொண்டது. மற்றொன்று நியாண்டர்தாலை ஆதாரமாகக்கொண்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதி மனிதனின் எக்ஸ் க்ரோமோசோம்கள் நியாண்டர்தால் மனிதனிடமிருந்து தோன்றியிருக்க வேண்டும் எனவும் அது நிச்சயமாக ஆப்பிரிக்காவை சேர்ந்த மனிதனுடையதல்ல என்றும் ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த இரண்டு பிரிவும் ஒரு கால கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்க வேண்டுமெனவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
நியாண்டர்தால் மனிதனின் முன்னோர்கள் சுமார் 4 லட்சத்திலிருந்து 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி தற்போதைய பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ரஸ்யா பகுதிகளில் கடந்த 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்திருக்க வேண்டும் என அந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் தற்போதைய நாகரீக மனிதன் சுமார் 50 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்துதான் வெளியேறியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. உடல் பலமும், பகுத்தறிவும் பெற்றிருந்த நியாண்டர்தால் மனிதனுக்கு தற்போதைய நாகரீக மனிதன் தோன்றிய இனத்தோடு தொடர்பு இருந்ததா? என்ற கேள்விக்கு ஆம் என்பது தான் பதில். நியாண்டர்தால் மனிதனும் தற்கால நாகரீக மனிதனும் ஒருவ்ருடன் ஒருவர் இரண்டற கலந்து போனவர்கள் தான் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
பறக்கும் காருக்கு அமெரிக்க அரசு அனுமதி
அமெரிக்க அரசாங்கம் டெரபியூஜியா என்ற பெயர் கொண்ட பறக்கும் காருக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த கார் விமானம் போன்று வானில் பறக்கும். காராக பயணிக்கும் பொழுது இதன் உச்ச வேகம் மணிக்கு 65 மைல்கள் மற்றும் பறக்கும் பொழுது மணிக்கு 115 மைல்கள் வேகத்தில் செல்ல கூடியதாகும். இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த காரின் இரு இறக்கைகளும் சேர்ந்து அதன் நீளம் 28 அடி 6 இஞ்ச் ஆக உள்ளது. மேலும், இறக்கைகளை 15 வினாடிகளில் மடித்து பழைய நிலைக்கு கொண்டு வர இயலும். சுமார் 20 மணி நேர பயிற்சியில் இதனை சுலபமாக இயக்க முடியும். 5 வருடங்களில் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படும் அதே வேளையில் இதற்கு அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுனாமி தாக்குதலை முன்கூட்டியே கண்டறிய புதிய முறை கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் மகேலா என்பவர் தலைமையில் சுனாமி தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு முடிவுகள் தெரிய வந்தன. கடந்த மார்ச் மாதம் ஜப்பான் நாட்டில் சுனாமி பேரலைகள் அதி பயங்கர தாக்குதல்களை நடத்தின. சுனாமி வருவதற்கு முன்பு பூமியிலிருந்து 250 கி.மீ. உயரத்தில் காற்று மண்டலத்தில் சில மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. வழக்கமாக சூரிய கதிர்கள் வாயு மண்டலத்தில் காற்று மூலக்கூறுகளை ஊடுருவி செல்லும் பொழுது உள்ள காற்றின் அடர்த்தியும், சுனாமியின் போது காற்றின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றமும் கண்டறியப்பட்டன. இதனை அறிவியலாளர்கள் வரைபடம் வழியே விளக்கியுள்ளனர். வரைபடத்திலுள்ள சிவப்பு நிற கோடுகள் சுனாமி தாக்குதலை குறிக்கிறது. எனவே, சுனாமி வருவதற்கு முன்பே காற்றில் ஏற்படும் இத்தகைய மாற்றத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பார்வை இல்லையா... இனி கவலை இல்லை
பார்வை குறைபாடு உடையவர்களுக்கான அபூர்வ கண்ணாடி ஒன்றை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு அரிய கண்டுபிடிப்பு. இந்த கண்ணாடியின் பிரேமிலுள்ள ஸ்குருக்களே ஒரு விதமான காமிராக்களால் ஆனது. இந்த காமிராக்கள் ஒரு மொபைல் போன் அளவிலான சிறிய கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய கம்ப்யூட்டரை பாக்கெட்டிலேயே வைத்துக்கொள்ளலாம். இந்த கண்ணாடியின் முன் வரும் எவரையும் அல்லது எதையும் இந்த காமிராக்கள் படம் பிடித்து கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. கம்ப்யூட்டர் அதனுடன் இணைந்த கண்ணாடியின் உள்பக்கம் அமைந்துள்ள எல் ஈ டி க்களை ஒளிரச்செய்வதன் மூலம் கண்ணாடியை அணிந்திருக்கிறவருக்கு தனக்கு எதிரே வருபவரை அல்லது வருபவற்றை அறிவுறுத்துகிறது. இந்த கண்ணாடியை பயன்படுத்தி பஸ் நம்பர்கள், ரயில்வே அட்டவணை போன்றவற்றை தெரிந்து கொள்ளமுடியும் என்பது இதன் சிறப்பு. இந்த கண்ணாடியை பயன்படுத்துபவர்கள் ஏ டி ஏம் வசதியைக்கூட சிரமமின்றி பயன்படுத்த முடியுமென்று இதனை வடிவமைத்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2014 ல் சந்தைக்கு வர இருக்கிற இந்த கண்ணாடி நிரந்தர பார்வை குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமல்ல முதுமை காரணமாக பார்வை குறைபாடடைந்தவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரியவருகிறது. இதனை குறைந்த விலைக்கு வழங்கவும் அதிக எடை இல்லாததாக செய்யவும் மேற்கொண்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது.
எரிகல் பாதிப்பை சந்திக்கும் அபாயம் கொண்ட 10 நாடுகள் பட்டியலில் இந்தியா
இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிக் பெய்லி என்ற அறிவியலாளர் பூமியின் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதியை எரிகல் தாக்கும் அபாயம் உள்ளது என்று கூறுகிறார். எரிகல்லால் அதிகமாக பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலை தனது கண்டுபிடிப்பான நியோஇம்பாக்டர் என்ற சாப்ட்வேரின் உதவியுடன் வரிசைப்படுத்துகிறார். இதில் சீனா முதலிடத்தையும், இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், இத்தாலி, பிரிட்டன், பிரேசில் மற்றும் நைஜீரியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கிறது. ஏறத்தாழ 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு 10 மைல்கள் விட்டம் கொண்ட மணிக்கு 25 ஆயிரம் வேகத்தில், 100 மெகா டன்கள் விசையுடன் பூமியின் மீது எரிகல் ஒன்று மோதியதால் டைனோசர் இனம் அழிந்து போனது என்று கருதப்படுகிறது. வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசையால் தான் பூமியின் மீது மோத இருக்கும் பெரும்பாலான எரிகற்களின் ஆபத்து தவிர்க்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
170 ஆண்டுகள் பழமையான பீர் கண்டுபிடிப்பு
பால்டிக் கடல் பகுதியில் உள்ளது அலாண்ட் என்னும் தீவு. சுமார் 170 ஆண்டுகளுக்கு முன் இந்த தீவுக்கு அருகில் கப்பல் ஒன்று மூழ்கிப்போனது. உடைந்து போன கப்பலுக்குள் இருந்து உலகின் மிக பழமையான பீர் பாட்டில் ஒன்றை பின்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். துரதிர்ஷ்டவசமாக, கடல் நீர் பாட்டிலுக்குள் எப்படியோ புகுந்திருந்ததால் பீர் கலப்படமாகிப்போனது. தற்போது பீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களும், முறைகளுமே இந்த பழைய பீரிலும் காணப்பட்டாலும் ஈஸ்ட் பயன்படுத்தப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வகை பீரை எப்படி தயார் செய்வது என்பது தெரியாமல் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 29.6.2011 2.46 PM
பூமியை நெருங்கும் விண்கல்
பூமியின் தென் முனையை நோக்கி மிக நெருங்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஆபத்தான விண்கற்கள் ஏதேனும் பூமியை நெருங்குகிறதா என்பதை கண்காணிக்கும் மெக்சிகோவைச்சார்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று, கடந்த புதன் கிழமையன்று, ஒரு விஷேச தொலை நோக்கியின் மூலம் இதனை கண்டறிந்துள்ளது. 2011 MD என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் வருகிற 27.06.2011 அன்று பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நெருங்கி வருவதாகவும் அப்போது அது மிகவும் பிரகாசமாக தோன்றும் எனவும் தெரிகிறது. இந்த தகவலை இங்கிலாந்து விண்வெளி ஆய்வு மையம் ஒன்று உறுதி செய்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் கண்ணீர் துளி வடிவில் தீவுகள்
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் பல்கலைகழக புவியியலாளர் லோர்னா மஸ்கர்டெல்லி என்பவர் மேற்கொண்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் கண்ணீர் துளி வடிவம் கொண்ட தீவுகள் அங்கே ஆழமான பகுதியில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை தெரிவிப்பதாக தகவலளித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டில் செவ்வாயில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஒடிசி விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் கால்வாய்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்றவை காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தீவுகளின் நீளம் 3 முதல் 30 மைல்கள் தொலைவு இருக்க கூடும் என்றும், சுமார் 1.5 முதல் 150 சதுர மைல்கள் பரப்பளவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நீர் தோன்றியிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
உலகளவில் பல சமுத்திரங்கள் வற்றி விடும்: ஆய்வாளர்கள் கருத்து
சமுத்திரங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் சர்வதேச சமுத்திர நிபுணர்கள் குழு ஒன்று ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் கூடி உலகில் சமுத்திரங்களின் நிலை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில், வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள கார்பன் டையாக்சைடு வாயுவால் சமுத்திரங்களின் வெப்பநிலை உயர்ந்து ஆல்காவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் அளவு குறைந்து நீரானது அமில தன்மை மிக்கதாக மாறி பவள பாறைகளின் பெரும் பகுதி அடுத்த தலைமுறைகளில் முற்றிலும் மறைந்து போகும் அபாயம் உள்ளது. மேலும் மீன் பிடித்தல் அதிகரித்து வருவதால் குறிப்பிட்ட இன மீன்களை வருங்காலங்களில் பார்க்க முடியாத சூழல் ஏற்படும். இதனை தடுக்க கார்பன் வெளிப்பாடை சீர்செய்வதும், அதிகப்படியான மீன் பிடித்தலை குறைத்திடவும், கடலில் பாதுகாக்கப்பட்ட இடங்களை ஏற்படுத்தவும் மற்றும் சுற்றுபுற சீர்கேடுகளை களையவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மாறி வரும் பருவ காலங்களால் சமுத்திரங்கள் வற்றி விடுவதென்பது கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளதாக வரலாறு கூறினாலும், தற்போது, எதிர்பார்க்கப்பட்டதை விட மிக விரைவில் இம்மாற்றம் வர கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்
பிரான்சு நாட்டின் அதி நவீன விமானத்தின் திட்ட வடிவம் வெளியீடு
லண்டன் நகரிலிருந்து டோக்கியோவிற்கு 2 மணி நேரங்களில் பயணம் செய்யும் வகையில் மேக் 4 என்ற பெயரிடப்பட்ட அதி நவீன விமானத்தை தயாரிப்பதற்கான திட்ட முன் வடிவை பிரான்சு நாட்டின் ஏர் பஸ் என்ற விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விமானத்தில் ஏறத்தாழ 100 பேர் வரை பயணம் செய்ய முடியும். ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் கொண்ட கொள்கலன் மற்றும் ராக்கெட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின்கள் ஆகியவை பயன்படுத்தப்படுவதால் அதிக சப்தம் ஏற்படாதவாறும், கழிவுகளாக நீர் மட்டுமே வெளியேறுவதும் இதன் சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன. மேலும் மிக வேகமாக பறப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இறக்கைகளும் மணிக்கு 3,125 மைல் வேகத்தில் பறக்கும் தன்மையும் கொண்ட இவ்விமானங்கள் வர்த்தக அடிப்படையில் செயல்பட இன்னும் 40 வருடங்கள் ஆகும் என்று திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களை போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தேனீக்கள்
இங்கிலாந்து நாட்டிலுள்ள நியூகேசில் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மெலிசா பேட்சன் மற்றும் ஜெரி ரைட் ஆகியோர் தேனீக்களை பற்றி ஆராய்ந்ததில் அவை மனிதர்களை போன்று உணர்ச்சியை வெளிப்படுத்த கூடியவை என்று அறிந்தனர். பொதுவாக முதுகெலும்பற்ற வகையை சேர்ந்த பூச்சி இனமான தேனீக்கள் இதுவரையிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரியாதவை என்றே கருதப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர்கள் பயிற்றுவித்த தேனீக்கள் வசித்த தேன் கூட்டின் மீது எதிராளிகள் தாக்குவது போன்று போலியான தாக்குதலை நடத்தினர். பின் அவற்றின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டன. மிக சிறிதளவே கொண்ட அவற்றின் மூளையில் அழுத்தத்தை தோற்றுவிக்கும் வேதிபொருள்களான டோபமைன், செரோடனின் மற்றும் ஆக்டோபமைன் ஆகியவற்றின் அளவுகள் மாறுபடுவதை கண்டறிந்தனர். இதனடிப்படையில் பார்க்கும் பொழுது தேனீக்களானது விலங்குகள் மற்றும் மனிதர்கள் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் தேனீக்களின் பிற உணர்வுகளையும் பற்றி அறிந்து கொள்ள ஆய்வானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுவையான தேனீர் தயாரிப்பது எப்படி?: ஆய்வில் புது தகவல்
சுவையான தேனீர் தயாரிப்பது எப்படி என்று கண்டறிய விரும்பிய இங்கிலாந்து பால் உற்பத்தி நிறுவனம் ஒன்று நார்தம்ப்ரியா பல்கலை கழக விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டது. சுமார் 180 மணி நேர ஆய்வுக்குப்பின் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்தனர் விஞ்ஞானிகள். தேனீர் தயாரிப்பது ஒரு கலை என்றால் அதை சுவையானதாக தயாரிப்பது ஒரு விஞ்ஞானம் என்று கூறிய அவர்கள், இதற்கென ஒரு பார்முலாவையே உருவாக்கியுள்ளனர். அவர்களது ஆய்வின்படி, தயாரித்து 6 நிமிடங்களுக்குப்பின்னரே தேனீர் சுவை மிகுந்ததாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். தயார் செய்யப்பட்டு 6 நிமிடங்களில் அது 60 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலைக்கு வரும் போதுதான் அதன் சுவை அதிகரிப்பதாகவும் சரியாக 17 நிமிடம் 30 வினாடிகளில் அது 45 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலைக்கு வருவதால், தன் சுவையையும் மணத்தையும் இழக்க தொடங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், தேனீர் தயாரிக்க 2 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாதென்றும்; வெறும் 10 மில்லி பால் மட்டுமே சேர்த்துக்கொள்ளலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
தண்ணீரை வெளியிடும் நட்சத்திரம்: நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
எந்திர துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டுகளின் வேகத்தைப்போல் 80 மடங்கு வேகத்தில் நீரை சிதற அடிக்கும் நட்சத்திரம் ஒன்றை நெதர்லாந்திலுள்ள லெய்டன் பல்கலை கழக விஞ்ஞானிகள், இன்ஃப்ராரெட் கதிர்களை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நட்சத்திரத்தின் வயது 1 லட்சம் ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனை ஒருவிதமான வாயு மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த வாயுக்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்கள் என தெரியவந்துள்ளது. இந்த ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் ஆயிரக்கணக்கான டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் தண்ணீராக மாறுவதாக மேலும் ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இந்த தண்ணீர், நட்சத்திரத்தின் துருவங்கள் வழியே வெளியேறும் போது 1 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டி வாயு நிலையை அடைகிறது. சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் மோதி, விரைவில் குளிர்ந்து மீண்டும் திரவ நிலையை அடைகின்றது. அமேசான் நதி 1 வினாடியில் எந்த வேகத்தில் பாய்கிறதோ அதைப்போல 100 மில்லியன் மடங்கு அதி வேகத்தில் தண்ணீரை சிதறியடிக்கிறது இந்த நட்சத்திரம் என்னும் ஆச்சரியமான உண்மையையும் இந்த குழுவினர் கண்டறிந்துள்ளனர். அதாவது, அதன் வேகம் மணிக்கு 2 லட்சம் கி மீ அல்லது ஒரு எந்திர துப்பாக்கியின் குண்டுகள் சீறிப்பாயும் வேகத்தைப்போல் 80 மடங்கு ஆகும்.
10 ஆயிரம் வருடங்களில் 10 சதவீதம் சுருங்கிய மனித மூளை
மனிதன் தனது மூளையை பயன்படுத்தி இயற்கையை பல்வேறு வழிகளில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறான். ஆனால் தற்போது, இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் மார்தா லார் என்பவர் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் கிடைத்த கற்கால மனிதர்களின் மண்டை ஓடு படிவங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கடந்த 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மூளையை விட தற்கால மனிதர்களின் மூளையளவு 10 சதவீதம் சுருங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கிரோ-மேக்னன் என்றழைக்கப்படும் அவர்களின் மூளையளவான 1,500 கன செ.மீ.லிருந்து நவீன மனிதர்களின் மூளையளவு 1,350 கன செ.மீ. ஆக சுருங்கியுள்ளது. இதற்கு, இக்காலத்தில் மேற்கொள்ளப்படும் உணவு பழக்க வழக்கம், நகரமயமாதலால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடுகள் மற்றும் பரவி வரும் வியாதிகள் ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. எனினும் இன்றைய மனிதர்களின் அறிவு வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது என்பதில் எந்த மாற்றமுமில்லை என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள்
ஜப்பான் நாட்டின் கோப் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் யமசகி தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றிற்கு முன்னோடியாக ஏறத்தாழ 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே குகை மனிதர்கள் இந்த பணியை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அரிசியில் காணப்படும் எஸ்.டி.1 என்ற ஒரு வகை மரபணுவை உருமாற்றம் செய்து பயிர்செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். மரபணு மாற்றத்திற்கு பின்பு செடியின் தண்டு மிக சிறியதாகவும், அதிக விளைச்சல் தருபவனவாகவும் அமைந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நவீன மரபணு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் அரிசி வகையில் எஸ்.டி.1 பெரும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2013ல் ஏற்படும் சூரிய புயலால் பூமிக்கு ஆபத்து
அமெரிக்க நாட்டின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் உதவி செயலாளரான காத்ரின் சுல்லிவன் என்பவர் 2013-ஆம் ஆண்டில் சூரிய புயலால் பூமியில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். 11 வருட இயற்கை சுழற்சியில் சூரியன் அதிக பலம் பெறும் அந்த ஆண்டில் இந்நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. முதன்முதலாக கடந்த 1859ஆம் ஆண்டு இங்கிலாந்து வானியலாளர் ரிச்சர்ட் கேரிங்டன் என்பவர் சூரிய புயலை கண்டறிந்தார். சூரியனில் ஏற்படும் மிக பெரும் வெடிப்பால் சூரிய புயல் உண்டாகிறது. இதன் மூலம் எக்ஸ் கதிர்கள் மற்றும் புற ஊதா கதிர்கள் ஆகியவை பெருமளவில் வெளிப்படும். இவை பூமியின் காந்த புலத்தினை அதிகமாக பாதிக்கும் வலிமை கொண்டது. எனவே, இங்குள்ள கணினியின் செயல்பாடுகளில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதிப்பு ஏற்படும். குறிப்பாக வானொலி அலைவரிசையில் பாதிப்பு, செயற்கைகோள் தகவல் தொடர்புகள் மற்றும் வரைபட வழிகாட்டி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் 1972-ஆம் வருடம் தகவல் தொடர்பில் பாதிப்பு மற்றும் 1989-ஆம் வருடம் கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் மின்சார பரிமாற்ற பணிகளில் பாதிப்பினை ஏற்படுத்தி இருளில் மூழ்க செய்தது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியதில் சூரிய புயல் பெரும் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
ஆழமான நிலப்பரப்பில் வாழும் உயிரினம் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் அமைந்துள்ள பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த டல்லிஸ் ஆன்ஸ்டாட் என்பவர் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் நிலப்பரப்பில் மிக ஆழமான பகுதியில் வாழும் உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள தங்க சுரங்கத்தில், ஏறக்குறைய ஒரு மைல் ஆழத்தில் வாழும் நெமடோடு என்னும் வகையை சேர்ந்த கொக்கி புழுவே அந்த உயிரினம் ஆகும். இதன் அறிவியல் பெயர் ஹேலிசெபலோபஸ் மெபிஸ்டோ. பொதுவாக, பயோஸ்பியர் எனப்படும் பூமியின் ஆழமான பகுதியில் வெப்பநிலை வேறுபாடு, குறைந்தளவு ஆக்சிஜன் மற்றும் இடப்பற்றாக்குறை ஆகிய மாறுபட்ட சூழ்நிலையில் காணப்படும் இவ்வுயிரினம், தான் உண்ணும் பாக்டீரியாவை போன்று 10 லட்சம் மடங்கு பெரியது என கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அறிவியலாளர்கள் நான்கு வகையான கொக்கி புழுக்களை கண்டறிந்துள்ளனர். 4.6.2011
சார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொண்ட நவீன பிகினி ஆடை
மேலை நாடுகளில் சூரிய குளியல் மிக பிரபலமானது. ஆண், பெண் வேறுபாடின்றி மிக குறைந்த ஆடையில் சூரியக்கதிர்கள் விழும் கடற்கரை மணற்பரப்பின் மீது ஓய்வாக படுத்திருப்பர். இதனால் சூரியனிலிருந்து நேரடியாக வைட்டமின் டி கிடைப்பதுடன் தங்களை உற்சாகப்படுத்தி கொள்வதற்கும் இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர்.இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ஆன்ட்ரூ ஸ்னீடர் என்பவர் புதிய முயற்சியாக சூரிய குளியல் எடுத்து கொள்வோர்களுக்கென்று பிகினி உடையை தயாரித்துள்ளார். அதிலிருந்து கேமெரா, ஐ&பாட் உள்பட பல்வேறு மின்னணு கருவிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஒரு பிகினி உடையை தயாரிப்பதற்கு ஏறத்தாழ 80 மணி நேரங்களாகும். இந்த உடையில் சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றும் கருவிகளும் மற்றும் கடத்திகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவோர் உடலில் ஈரமில்லாமல் காய்ந்த நிலையில் இருக்க வேண்டுமென்பது மட்டும் அவசியம். பிகினி பெண்களுக்குரியது என்னும் நிலையில் ஆண்களுக்கான ஆடையை தயாரிக்கும் முயற்சியிலும் ஸ்னீடர் ஈடுபட்டுள்ளார். 3.6.2011
தாம்பத்ய இன்பத்தில் மூளையின் பங்கு: ஆய்வில் புதிய தகவல்
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் அமைந்துள்ள ரட்ஜர்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் பேரி கோமிசருக் என்பவரின் தலைமையில் பெண்கள் தாம்பத்யத்தின் போது அடையும் இறுதிநிலை இன்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பெண்கள் சிலரை வரவழைத்து அவ்வாறு இன்பம் பெறுவது போன்று கற்பனை செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டனர். பின்னர் அவர்களின் மூளை பகுதிகள் தனியாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கொண்டு படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வில், முடிவெடுக்கும் பகுதி, அவசர நிலையில் செயல்படுதல் மற்றும் கற்பனை திறன் ஆகிய செயல்பாடுகளுக்கான பகுதியாக விளங்கும் ப்ரிப்ரன்டல் கார்டெக்ஸ் (பி.எப்.சி.) உள்பட மூளையின் 30 பாகங்கள் எழுச்சி பெற்று பெண்களின் இன்பத்தின்போது உறுதுணையாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், தனிமையில் இருக்கும்போது மேற்குறிப்பிட்ட பாகங்களில் ஒன்று தாம்பத்ய இன்பம் பற்றி கற்பனையை வளர்த்து அதன் வழியே திருப்தியடைவதாகவும், ஆடவன் துணையுடன் தாம்பத்யத்தில் ஈடுபடும் போது மற்ற பாகங்கள் எழுச்சி பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்களின் உடலியல் உணர்வுகளான வலி, மகிழ்ச்சி போன்றவற்றை பற்றி ஆராய்ந்து தெளிவு பெறும் நோக்கத்துடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செவ்வாயில் உயிரினங்கள் பற்றி அறிய நாசாவின் புதிய விண்கலம்
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு கியுரியாசிட்டி என்ற பெயரிலான விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்னர் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் வலம் வந்து படங்களை எடுத்து அனுப்பி கொண்டிருந்த பீனிக்ஸ் விண்கலம் பழுதடைந்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விண்கலம் சென்று இறங்குவதற்காக பட்டியலிடப்பட்ட 60 இடங்களிலிருந்து குறிப்பாக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை மாவ்த் வேலிஸ், கேல் கிரேடர், ஹோல்டன் கிரேடர் மற்றும் எபெர்ஸ்வேல்ட் ஆகியவை ஆகும். இதற்கு முன் அங்கே நுண்ணுயிரிகள் ஏதும் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு விண்கலமானது தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக குளிர் நிறைந்த பகுதியிலும் பணிபுரிதல், வெகு விரைவாக வேகத்தை கட்டுப்படுத்தும் திறன் மற்றும் மிக குறைந்த பரப்பளவுள்ள இடத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
49 ஆண்டுகளாக மரணத்தோடு போராடும் ஹாகிங்: சொர்க்கம் என்பது அழகிய கதை என்கிறார்
இங்கிலாந்து நாட்டின் புகழ் பெற்ற அறிவியலாளர் ஸ்டீபன் ஹாகிங். தனது 21 வயதில் நரம்பு செல் வியாதியால் பாதிக்கப்பட்டு கடந்த 49 வருடங்களாக வாழ்க்கையில் போராடி வருகிறார். கதிரியக்கத்தை உமிழும் கருப்பு துளைகள் பற்றிய இவரது இயற்பியல் கருத்துகள் மகுடம் சூட்டும் சாதனைகளாகும். இவர், மரணத்தை பற்றிய தனது எண்ணங்கள் பற்றி கூறுகையில், கடந்த 49 வருடங்களாக மரணத்தோடு தான் போராடி வருகிறேன். எனவே, மரணத்தை கண்டு பயமில்லை. ஆனால் இறப்பதற்கு நான் அவசரப்படவில்லை. நான் விரும்பியவற்றை செய்வதற்கென்று நிறைய விசயங்கள் உள்ளன. எனது மூளையை பல பாகங்கள் அடங்கிய ஒரு கணினியாகவே கருதுகிறேன். அப்பாகங்கள் பழுதடையும் பொழுது கணினி (மூளை) ஆனது அதன் செயலை நிறுத்தி விடுகிறது. இருளை கண்டு பயப்படுகிற மக்களுக்கென்று கூறப்படுகிற அழகிய கதையான மரணத்திற்கு பின் வாழ்வு அல்லது சொர்க்கம் என்பது பழுதடைந்து முடிந்து போன கணினிகளுக்கு கிடையாது என்கிறார்.
கல்லீரல் சிகிச்சைக்கு பயன்படும் புதிய ஸ்டெம் செல் சிகிச்சை முறை
மருத்துவ உலகில் ஒரு சாதனையாக கருதப்படுவது ஸ்டெம் செல் சிகிச்சை முறை. செல்லின் அடிப்படை பண்புகளை கொண்டிருப்பதோடு வேறு எந்த செல்லாகவும் மாற்றம் பெற்று வளர்ச்சியடையும் தன்மை வாய்ந்த ஸ்டெம் செல்கள் பெரும்பாலும் கருப்பகுதியிலிருந்து பிரித்தெடுத்து உருவாக்கப்படும் நிலையில் தற்போது தோல் மற்றும் இரத்த செல்களில் இருந்து ஸ்டெம் செல்லானது உருவாக்கப்பட்டு கல்லீரல் செல்களாக மாற்றப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உடலிலிருந்தே பல லட்சக்கணக்கான எண்ணிக்கையில் எளிதான முறையில் உருவாக்கப்படும் பக்கவிளைவுகள் அற்ற இத்தகைய செல்களை தூண்டுவிக்கப்பட்ட புளுரிபொடென்ட் ஸ்டெம் செல் (ஐ.பி.எஸ்.சி.) என அழைக்கின்றனர். பாதிக்கப்பட்ட இடத்தில் புதிய உறுப்பாக வளரும் அளவிற்கு தன்மை கொண்ட இந்த ஸ்டெம் செல்கள் குறித்து மேரிலேண்டில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கிம்மல் புற்றுநோய் மையத்தின் பேராசிரியர் யூன்&யங் ஜேங் என்பவர் கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை செய்வதற்கும் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை பெறுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். 12.5.2011
கடவுள் நம்பிக்கை மனிதர்களிடம் அதிகமாக உள்ளது: ஆய்வு முடிவு
இங்கிலாந்து நாட்டில் இப்சோஸ் நகரில் அமைந்துள்ள சமூக ஆராய்ச்சி அமைப்பானது கடவுள் நம்பிக்கை குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. அதில் 23 நாடுகளை சேர்ந்த 18,829 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 51 சதவீதம் பேர் மரணத்திற்கு பின் வாழ்வு இருக்கிறது என நம்புகின்றனர். அதே வேளையில் 18 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் 17 சதவீதம் பேர் எதை நம்புவது என தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். இந்தோனேசியா, துருக்கி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டுள்ளனர். இந்தியாவில் 24 சதவீதம் பேரும், சீனாவில் 14 சதவீதம் பேரும் மற்றும் ரஷ்யாவில் 10 சதவீதம் பேரும் பல்வேறு கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். கடவுளை நம்பாதவர்கள் வரிசையில் 40 சதவீதம் பேர் பிரான்சு, சுவீடன், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் வருகின்றனர். மேலும், மறுபிறப்பின் மீது ஹங்கேரி நாட்டினர் அதிகமாக நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவர்களில் சுமார் 13 சதவீதம் பேர் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளனர். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க கடவுள் நம்பிக்கையும் மனிதர்களிடம் பரவலாக காணப்படுகிறது என்பது ஆராய்ச்சியிலிருந்து தெரிய வருகிறது. 26.4.2011
ஆஸ்திரேலியாவில் உருவாகும் உலகின் மிக பெரிய தொலைநோக்கி மெகல்லன்
ஆஸ்திரேலிய நாட்டின் கேன்பெரா நகரில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் இன்டர்நேஷனல் கன்சார்டியத்துடன் இணைந்து உலகின் மிக பெரிய தொலைநோக்கி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஹப்பிள் தொலைநோக்கியை காட்டிலும் 10 மடங்கு துல்லியமாக படங்களை காட்டும் திறன் பெற்ற இதற்கு மெகல்லன் என பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 12.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், விண்வெளியில் உள்ள எந்த ஒரு பொருளையும் பற்றி ஆராய்வதற்கு ஏற்ற வகையில் இது இருக்கும். ஏறத்தாழ 700 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் தயாராகும் இத்தொலைநோக்கி பற்றி ரிசர்ச் ஸ்கூல் ஆப் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸின் இயக்குநரான ஹார்வே பட்சர் என்பவர் கூறும்போது, "புதிய தொழில்நுட்பத்துடன் உருவாகும் மெகல்லன், விண்வெளியின் பல அரிய விசயங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும். மேலும், 6 அல்லது 7 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பால்வெளிவீதி எவ்வாறு இருந்தது என்பதை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்" என்று கூறினார். வரும் 2018& ஆம் ஆண்டில் இந்த தொலைநோக்கி முழு வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 19.4.2011
உலக மொழிகளின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா: ஆய்வில் தகவல்
ஆஸ்திரேலிய நாட்டில் அமைந்துள்ள குயின்ஸ்லாண்ட் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் குயென்டின் அட்கின்சன் என்பவர் தலைமையில் முதன்முதலில் மொழியானது எங்கு தோன்றியது என ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் பேச்சில் இருந்து தான் தற்போது பரவலான மக்களால் பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், வங்காளம், ஜப்பான் மற்றும் இந்தி உட்பட உலகின் பல்வேறு மொழிகளும் தருவிக்கப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விற்காக அட்கின்சன், உலகளவில் பேசப்படும் 504 மொழிகளை எடுத்து கொண்டார். அந்த மொழிகளில் பயன்படுத்தப்படும் உச்சரிப்புகள் மற்றும் வெவ்வேறு சப்தங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தார். ஆய்வில், மொழியானது ஏறத்தாழ 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், தற்காலத்தில் வாழும் மனிதர்கள் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை மையமாக கொண்டு வாழ்ந்துள்ளனர். பின்னர் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கும் பரவி வாழ ஆரம்பித்துள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்த போது அங்கு பேசப்பட்ட மொழியும் நிலைத்துள்ளது. அதுவே, சிறு சிறு குழுக்களாக மக்கள் பிரிந்து செல்லும் போது அவர்களின் இடையே பேசப்பட்ட மொழி காலப்போக்கில் மாற்றம் பெற தொடங்கியது. தலைமுறைகள் மாற மாற மொழிகளும் மாற்றம் பெற்றுள்ளன. அதில், ஆப்பிரிக்காவில் ஆரம்பகாலத்தில் பேசப்பட்ட மொழியின் சப்தங்கள் மற்றும் உச்சரிப்புகள் ஆகியவை படிப்படியாக மறைந்து போயுள்ளன என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது
No comments:
Post a Comment